பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!தலைப்புதான் 3 இடியட்ஸ்... ஆனால் இந்தப் படம் செய்யும் சாதனையை இந்திய திரையுலகமே 'ஆ' என ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

10 நாட்களில் ரூ.240 கோடியை வசூல் செய்துள்ளது ஆமீர் கான் நடித்துள்ள இந்தப் படம்.

இதுவரை பாலிவுட் வரலாற்றில் பார்க்காத மிகப் பெரிய கலெக்ஷன் இது. வெளியாகி இரண்டு வாரங்களைத் தாண்டிய நிலையில் இன்னும் குறையாத ரசிகர் கூட்டதுடன் ஓடிக்கொண்டுள்ளது.

3 இடியட்ஸ் உள்நாட்டில் 1500 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 344 தியேட்டர்களிலும் வெளியானது.

இதற்கு முன்பு ஆமீர் கான் நடித்து வெளியான கஜினிதான் அதிகபட்ச வசூல் சாதனை செய்த இந்திப்படமாக இருந்தது. இப்போது தனது சாதனையை தானே முறியத்துள்ளார் ஆமீர்.

கஜினி திரைப்படத்தின் மொத்த வசூல் 225 கோடி ரூபாய். இது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூலான மொத்த தொகை. அதற்கு அடுத்து சன்னி தியோல் நடித்த கத்தா படம் ரூ.175 கோடி வசூல் செய்தது.

ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த தூம்-2 ரூ.145 கோடி வசூலித்து மூன்றாம் இடம் பெற்றது.

ஆனால் இந்தப் படங்களின் மொத்த வசூல்தான் இங்கே தரப்பட்டுள்ளது. 3 இடியட்ஸ் படமோ இந்த சாதனைகளை பத்தே நாளில் அநாயாசமாக வாரிக் குவித்துள்ளது.

இந்தப் படத்துக்கு விளம்பரம் உள்பட செலவான தொகை ரூ.45 கோடி. இப்போது அதைவிட 5 மடங்கு கூடுதலாக வசூலித்துக் கொடுத்துள்ளது.

விது வினோத் சோப்ரா தயாரித்துள்ள 3 இடியட்ஸின் விநியோக உரிமையை ரூ.80 கோடி கொடுத்து அனில் அம்பானியின் பிக் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது.

இந்த சாதனை குறித்து ஆமீர்கான் கூறுகையில், "நான் இந்த மாதிரி பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விவரங்களை விட, மக்களின் கருத்துக்குதான் மதிப்பளிப்பேன். இருந்தாலும் 3 இடியட்ஸ் வசூல் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. கஜினியின் லைப் டைம் வசூலை இந்தப் படம் பத்தே நாளில் முறியடித்துள்ளது சாதாரண விஷயமல்ல" என்றார்.

கடந்த ஆண்டு மட்டும் பாலிவுட்டில் 123 நேரடிப் படங்கள் வெளியாகின. அவற்றின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் மொத்தம் ரூ.1,600 கோடி. இதில் 3 இடியட்ஸின் பங்கு மட்டும் 15 சதவீதம். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு கதை மட்டும் காரணமல்ல.. அந்த கதையை ஒட்டி எழுந்த பலத்தை சர்ச்சையும், அதனால் வந்த விளம்பரமும்கூட ஒரு காரணம் எனலாம்.

Comments

Most Recent