பொங்கல்-தடை கடந்து வந்த ஆயிரத்தில் ஒருவன்!செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி - ரீமா சென் நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு சிட்டி சிவில் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டது.

கார்த்தி- ரீமாசென் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தனது மனுவில் கூறியிருந்தார் சந்திரசேகரன்.

இதையடுத்து இப்படத்தை ஜனவரி 20-ந்தேதி வரை ரிலீஸ் செய்யக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டது.

இன்று இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி கிருபாநிதி வழக்கை தள்ளுபடி செய்து இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீசாகிறது.

ஏன்...?

தயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்தில் நடந்த பேச்சில் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரனுக்கும் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் உடன்பாடு ஏற்பட்டதால் மனு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோர்ட்டில் கூறப்பட்டது.

மேலும் சம்பள பாக்கி தொடர்பாக துணை நடிகர்-நடிகைகள் கொடுத்த புகார் அதிகாரப்பூர்மற்ற வேறு சங்கம் மூலம் தரப்பட்டது என்பதால், அந்த புகார் பட வெளியீட்டைத் தடுத்து நிறுத்தாது என்று சினி ஏஜென்டுகள் சங்கம் கூறியுள்ளது.

எனவே 'தடை பல கடந்து பொங்கல் முதல் ஆயிரத்தில் ஒருவன்' என தாராளமாக விளம்பரங்களில் போட்டுக் கொள்ளலாம் தயாரிப்பாளர் ரவீந்திரன்!!

Comments

Most Recent