விரைவில் மருதநாயகம்! - கமல்கமல் ஹாஸனின் கனவுப் படமான மருதநாயகம் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றார் கமல்ஹாஸன்.

சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் பேசியது:

இலக்கியமும் சினிமாவும் இருகரைகள். இரண்டுக்கும் பாலம் கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ஆனால் இரு பிரிவினரும் இணைய தயக்கம் காட்டி வருகிறார்கள். திரைப்படத் துறையினர் சினிமாவே இலக்கியம் என்கின்றனர். இலக்கியவாதிகள் அதை ஏற்க மறுக்கின்றனர்.

இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முடியாது. ஆனால் ஒரு பாலம் கட்டலாம்.

எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமாதான். எனது படங்கள் வித்தியாசப்படுவதற்கு இலக்கிய எழுத்துக்களே காரணம். அவை என் எழுத்தல்ல. மற்றவர்கள் எழுதியதுதான்.

சினிமா பார்ப்பவர்கள், புத்தகம் வாசிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் சினிமா சரி இல்லை என்று கருத்து கூறும் அளவுக்கு தெளிவு பெற முடியும். திரைப்படத் துறையினரும் இலக்கியவாதிகளும் வேறு வேறு அரிசியில் அப்பியாசம் எழுதுகிறார்கள். மக்கள் பேசும் மொழியுடன் சேராதவரை சினிமா ஊமையாகவே இருக்கும்.

சினிமா வியாபாரம் சார்ந்தது. அது அற்புதமானதாக இருந்தாலும் கூட அபாயகரமானதாகவும் உள்ளது. எனவே இலக்கியத்தையும் சினிமாவையும் இணைப்பது சுலபமான காரியம் அல்ல. இருதுறையினரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். நான் நடித்த அன்பே சிவம் புதிய முயற்சி. வியாபார ரீதியாக அது விமர்சிக்கப்பட்டு இருக்கலாம். ஆனாலும் காலம் தாழ்ந்து பலனை தந்துள்ளது.

விலைவாசி உயர்வால் மருதநாயகம் படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது. ஆனாலும் விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன" என்றார்.

மருதநாயகம் படம் ஏற்கெனவே தொடங்கி சில தினங்கள் படப்பிடிப்பு நடந்ததோடு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சன் பிக்ஸர்ஸ் துணையுடன் இந்தப் படத்தை கமல் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

Comments

Most Recent