அஜீத்... அசலுக்கு 'இணை இயக்குநர்'!!

பொதுவாக பெரிய ஹீரோக்கள், தங்களது படங்களின் தலைப்பு முதல் 'தி எண்ட்' கார்டு போடுவது வரை சகலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஆனால்  வெளியில் சொல்ல மாட்டார்கள். 'எல்லாம் டைரக்டர்தாங்க' என்று பம்முவார்கள்.

ஆனால் அஜீத், தைரியமாக ஒரு காரியம் செய்துள்ளார்... வெற்றியோ தோல்வியோ அதில் தனது பங்களிப்பு என்ன என்பதும் தெரியட்டுமே என்ற எண்ணத்தில், அசல் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவராக தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் கதை- திரைக்கதை- வசனம் என்று மூன்று பேர் பெயர்கள் இடம் பெறுகின்றன. அதில் ஒன்று அஜீத்துடைய பெயர். மற்ற இருவர் சரண் மற்றும் யூகி சேது.

படத்தின் இணை இயக்கமும் அஜீத் குமார்தான். இதனை படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ விளம்பரங்களிலும் போட்டுள்ளனர்.

அஜீத் குமாரின் 49-வது படம் அசல். சமீரா ரெட்டி, பாவனா நாயகிகளாக நடித்துள்ளனர். சரண் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இரட்டை வேடமேற்றுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தின் சென்சார் காட்சி நேற்று நடந்தது. படம் பார்த்த தணிக்கைக் குழுவினர், 'சில ஆக்ஷன் காட்சிகளை நீக்கினால் க்ளீன் யு கொடுத்துவிடலாம், இல்லாவிட்டால் யு/ஏதான்' என சரணிடம் தெரிவிக்க, 'எந்தக் காட்சியையும் வெட்ட வேண்டாம்... அப்படியே யு /ஏ கொடுங்கள்' என்று கூறிவிட்டாராம்.

இப்போது யு/ஏ சான்றிதழுடன் அரங்குகளுக்கு வருகிறது அசல்.

ஆரம்பத்தில் இந்தப் படம் பிப்ரவரி 12ல் வெளியாகும் என அறிவித்திருந்த தயாரிப்பாளர் ராம்குமார், இப்போது ஒருவாரம் முன்னதாகவே பிப்ரவரி 5ம் தேதி அசலை வெளியிடுகிறார்.

Comments

Most Recent