அவதாருக்கு சீனாவில் தடை!



உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீன அரசு.

கிராபிக்ஸ் காட்சிகள் மக்களைப் பயமுறுத்துவதாக இருப்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் தெரிவித்துள்ளது.

அவதார் உலகம் முழுக்க வெளியான சமயத்தில் சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. கடந்த வாரம்தான் இந்த நாடுகளில் அவதார் திரையிடப்பட்டது.

இந்தப் படத்துக்கு சீனாவில் மிக அபாரமான வரவேற்பு கிடைத்தது. முதல் வசூல் 46 மில்லியன் டாலர்கள். இது சீன திரைவரலாறு காணாத சாதனையாகும்.

தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 மில்லியன் டாலர்களைக் குவித்தது இந்தப் படம்.

இந்த நிலையில், சீன அரசு திடீரென அவதாருக்கு தடை விதித்துவிட்டது.

இப்படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் சீன மக்களை பெரும் வியப்பிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளதாகவும், முழுக்க 3டி யில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் இதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவதார் படத்தில் வெளி உலகத்தினரிடம் இருந்து தங்களது நிலத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க நவி படையினர், போராடுகின்றனர். அதே நிலைதான் தற்போது சீனாவில் நிலவி வருகிறதாம். தற்போது சீனர்கள் தங்கள் சொத்துக்களை அரசிடமிருந்தும், ரியல் எஸ்டேட் அதிபர்களிடமிருந்தும் காக்க போராடி வருகின்றனர்.

இப்படத்தில் வரும் காட்சிகளின் மூலம் மக்களின் உணர்வுகள் மேலும் தூண்டப்படலாம் என கருதி சீன அரசு இந்தப் படத்துக்கு தடை விதித்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அவதாருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளதாம். மனித உரிமை, சுதந்திரத்தை தூண்டும் வகையிலான எதையும் சீனா அனுமதிப்பதில்லை. அதன் எதிரொலியே இந்தப் படத்துக்கான தடையும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

Comments

Most Recent