வேட்டைக்காரன் திருட்டு சிடி தயாரி்ப்பு - தியேட்டர் மீது சன் பிக்சர்ஸ் புகார்நெல்லை : நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை திருட்டு சிடிக்களில் பதிவு செய்து விற்ற அம்பாசமுத்திரம் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டிஜஜி கண்ணப்பனிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி தியேட்டரில் நடிகர் விஜய் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான வேட்டைக்காரன் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டரில் வேட்டைக்காரன் படம் திருட்டுத்தனமாக சிடியில் பதிவு செய்யப்பட்டதாக நெல்லை மாவட்ட வேட்டைக்காரன் திரைப்பட வினியோகஸ்தர்களுக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், சன் பிக்சர்ஸ் சார்பில் நேற்று நெல்லையில் டிஜஜி கண்ணப்பனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் அம்பாசமுத்திரம் ஸ்ரீ பாலாஜி தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள வேட்டைக்காரன் திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருட்டு தனமாக சிடிக்கள் தயாரித்து பல பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட ஸ்ரீ பாலாஜி தியேட்டர் உரி்மையாளர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு டிஜஜி கண்ணப்பன், அம்பாசமுத்திரம் டிஎஸ்பி கோபாலனுக்கு உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் பீட்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Most Recent