ஜக்குபாய் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானது, அதன் திருட்டு விசிடிக்கள் விற்பனையாவது ஆகியவை குறித்து இன்று திரையுலகினருடன...
ஜக்குபாய் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானது, அதன் திருட்டு விசிடிக்கள் விற்பனையாவது ஆகியவை குறித்து இன்று திரையுலகினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோர் கண்ணீர் விட்டனர்.
சரத்-ஷ்ரேயா நடிப்பில் உருவான இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே வெளியாகிவிட்டது.
இது குறித்துப் பேசிய படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்,
இதற்கு முன்னர் ஒரு படத்தின் ஒரு பாடல் காட்சி அல்லது ஒரு சண்டைக் காட்சி இன்டர்நெட்டில் வெளியானது உண்டு. ஆனால் இப்போது முழு படமும் இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கிறது. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. படம் இன்னமும் முழுவதுமாக உருவாக்கப்படவில்லை. எடிட்டிங் கூட முழுதாக நடக்கவில்லை.
இது ஒரு கொலை மாதிரி தான். இதன் மூலம் ஒரு வருட உழைப்பு எல்லாம் வீணாகி விட்டது. இந்த சம்பவம் பற்றி எல்லோரும் விசாரிக்கும் போது ஏதோ இழவு வீடு போல தோன்றுகிறது என்ற அவர் தொடர்ந்து பேச முடியாமல் அமர்ந்துவிட்டார்.
இதையடுத்து பேச வந்த ராதிகா மைக்கை வாங்கினார். ஆனால், பேச முடியாமல் கண் கலங்கி தவித்ததால் அவரிடமிருந்து சரத்குமார் மைக்கை வாங்கி கண் கலங்கியபடி பேசினார்.
அவர் கூறுகையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி மற்றும் விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ரூ. 15 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பணத்தைக் கூட விடுங்கள். நானும் ராதிகாவும் இன்னும் கடினமாக உழைத்து சம்பாதித்து விடுவோம். ஆனால் எங்களுடைய உழைப்பே திருடப்பட்டுவிட்டதைத் தான் தாங்க முடியவில்லை.
இந்த நஷ்டத்தை நானும், ராதிகாவும் உழைத்து ஈடு செய்ய முடியும். தயாரிப்பாளர்கள் நிலைமைதான் கவலைக்குரியதாக உள்ளது. எபெக்ட், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங் என நிறைய இடங்களுக்கு படத்தின் காப்பி போகிறது. அப்படி ஏதோ ஒரு இடத்தில் தான் படம் வெளியே போயுள்ளது.
திருட்டு விசிடிகள் வந்திருப்பது முழுமையான படம் அல்ல, ஜக்குபாயை முழுமையாக வெளியிடுவோம். அந்த படத்தை எல்லோரும் திரையில் பார்த்து ஆதரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் கலையுலகை அழித்து விடாதீர்கள் என்றார்.
ஒருவழியாக தன் கவலையை மறைத்துக் கொண்டு பேசிய ராதிகா, ஒரு வருட உழைப்பை ஒரே நாளில் பாழடித்து விட்டனர். இப்படி சிடியில் படத்தை வெளியிட்டதை விட எங்களை நடுரோட்டில் வைத்து சுட்டு கொன்றிருக்கலாம் என்று கூறிவிட்டு மீண்டும் கண் கலங்கிவிட்டார்.
Comments
Post a Comment