"ரசனைத்திறன் மேம்பட வேண்டும்'


தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் தனக்கென ஒரு புதிய பாணியை உருவாக்கி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் செல்வராகவனின் பிரமாண்டமான படைப்பு "ஆயிரத்தில் ஒருவன்'. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், மூன்று வருட உழைப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள இந்தப் படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப, படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் "ட்ரிம்' செய்யப்பட்டு 20 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து படத்துக்கு வரவேற்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வராகவன் படம் குறித்த சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவற்றின் விவரம்:

படத்தில் சோழர், பாண்டியர் கால சரித்திரம்

திரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி..?

சரித்திரத் தகவல்கள் அனைத்தையும் தஞ்சைப் பல்கலைக்கழக ஆவணங்களிலிருந்தும் ஏராளமான கல்வெட்டுகளிலிருந்தும் முறையாகப் பெற்றோம். சினிமாவுக்காக சில இடங்களில் கற்பனை கலக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, சரித்திரத்தைத் திரித்துக் கூறவில்லை.

படத்தில் இடம்பெறும் இலக்கிய வசனங்கள்  மற்றும் சில காட்சிகள் ரசிகர்களைச் சென்றடையுமா?

படத்தை உன்னிப்பாகப் பார்த்தால் நிச்சயம் புரியும். தவிர, தமிழ் நமது தாய்மொழி என்பதால் அந்த இலக்கியத் தமிழுக்கு, உரைநடைத் தமிழில் "சப் டைட்டில்' போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

சில காட்சிகளைப் பற்றி சர்ச்சையான கருத்துகள் வருவது உண்மைதான். ஒரு படத்தில் சண்டைக் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்; பாடல் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நாமாக ஒரு எல்லையை வைத்துக்கொண்டோம். அதையே தமிழ்ப் படத்தில் எதிர்பார்க்கிறோம்.

"ஹாரிபாட்டர்', "மம்மி', "அவதார்' போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது அதில் லாஜிக் பார்ப்பதில்லை; குறை கண்டுபிடிப்பதில்லை; பாராட்ட மட்டுமே செய்கிறோம். ஆனால், அதே முயற்சியை ஒரு தமிழ்ப் படத்தில் செய்தால் விமர்சனங்கள் எழுகின்றன. மக்களின் ரசனைத்திறன் மேம்பட்டால் தமிழில் பல புதிய, வித்தியாசமான படைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

"ஆயிரத்தில் ஒருவன்' ஒரு ஹாலிவுட்

படத்தின் தழுவல் எனக் கூறப்படுவது பற்றி..?

நிச்சயமாக இல்லை. முழுக்க முழுக்க எங்களுடைய "டீம் ஒர்க்'தான். இது ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல் என நிரூபித்தால் சினிமாத்துறையை விட்டே விலகிக்கொள்கிறேன்.

நான் இயக்கிய படங்களில் சிறந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்'தான். படத்துக்கு நல்ல "ஓபனிங்' கிடைத்துள்ளது. பெரிய வரவேற்பு கிடைத்தால் இதன் இரண்டாம் பாகத்தையும் நிச்சயம் எடுப்பேன். அதில், முதல் பாகத்தில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகளைத் திருத்திக்கொள்வேன் என்றார் செல்வராகவன்.

இந்த சந்திப்பின்போது நடிகர் பார்த்திபன், இயக்குநர் அழகம்பெருமாள், நடிகை ரீமாசென், தயாரிப்பாளர் ரவீந்திரன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, கலை இயக்குநர் சந்தானம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments

Most Recent