சம்பள பாக்கி... 'ஆயிரத்தில் ஒருவன்' துணை நடிகர்கள் போலீஸில் புகார்!



பொங்கலுக்கு வருமா வராதா என்ற சந்தேகத்தை பலமாகக் கிளப்பிவிட்டுள்ள ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு மேலும் ஒரு சிக்கல்.

இந்தப் படத்தில் நடித்த துணை நடிகர்கள், தங்களது சம்பள பாக்கி ரூ 7 லட்சத்தை பெற்றுத் தருமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கியுள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ரீமாசென், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளனர் இந்தப் படத்துக்கு. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

ஏற்கெனவே வரும் ஜனவரி 20-ம் தேதி வரை இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், துணை நடிகர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

"ஆயிரத்தில் ஒருவன் படத்தில் துணை நடிகர்-நடிகைகள் 100 பேர் நடித்தோம். ஐதராபாத், புதுச்சேரி, குற்றாலம், கோவூர் ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 லட்சம் சம்பள பாக்கி இதுவரை கிடைக்கவில்லை. அந்த சம்பள பாக்கியை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்", என்று கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன், துணை நடிகர்களிடம் தெரிவித்தார். பிறகுதான் அனைவரும் கலைந்து சென்றனர்.

தடை விலகியது:

இந் நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு சிட்டி சிவில் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டுள்ளது.

படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தனது மனுவில் கூறியிருந்தார் சந்திரசேகரன்.

இதையடுத்து இப்படத்தை ஜனவரி 20ம் தேதி வரை ரிலீஸ் செய்யக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இன்று இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி கிருபாநிதி வழக்கை தள்ளுபடி செய்து இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீசாகிறது.

தயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் மனு விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Comments

Most Recent