துணிச்சல்- பட விமர்சனம்



நடிப்பு: அருண் விஜய், ஷிவா முஞ்ஜால், ரமணா
இசை: பிரேம்ஜி அமரன்
இயக்கம்: ஏ.மஜீத்

பெரும் வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு அருண் விஜய்யும் நாயகி ஷிவா முஞ்ஜாலும் காதலர்களாக நடிக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது கொலை செய்ய ஏகப்பட்ட சில்லறைத்தனமான திட்டம் போடுகிறார்கள்.

ஒருமுறை ரெயிலில் ஜாலியாக வெளியூர் போகும் போது கதவருகில் நிற்கும் ஷிவா முஞ்சாலை அருண் விஜய் ஆற்றுக்குள் தள்ளி விடுகிறார்.

ஆனால் அதிலிருந்து தப்புகிறார் நாயகி.

பதிலுக்கு இன்னொரு நாள் முகமூடி போட்டுக் கொண்டு அருண் விஜய்யை எட்டாவது மாடியில் இருந்து தள்ளி விடுகிறார். அவரும் பிழைத்துக் கொள்கிறார்!

இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் கொலை முயற்சி செய்வதும் தப்புவதுமாக ரசிகர்களை கொல்கிறார்கள். ஒருவழியாக க்ளைமாக்ஸ் வருகிறது. அதில் இருவரும் சேர்ந்து தங்களை இப்படி விரோதிகளாக மாற்றிய வில்லன் ரமணாவைக் கொல்ல, நாம் தப்பித்து ஓடி வருகிறோம், தியேட்டரை விட்டு.

படத்தில் பரவாயில்லை எனும் அளவுக்கு செய்திருப்பவர் வில்லனாக வரும் ரமணாதான். மிமிக்ரி செய்து காதலன் காதலியை ஏமாற்றி கொல்வது கொஞ்சம் புதுசு. ஆனால் அதற்கான காரணம் அரதப் பழசு.

இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு டப்பிங் வாய்ஸ். இதற்காக புகாரெல்லாம் செய்தாராம் அவர். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சொந்தமாக இவர் டப்பிங் பேசாததே பெரும் ஆறுதலாக உள்ளது.

ஹீரோயின் சில காட்சிகளில் ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார். இருந்தாலும் ஹீரோவுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று ஆகிவிடுகிறது.

ஒளிப்பதிவு, பிரேம்ஜி அமரன் இசை எல்லாவற்றிலுமே பழமை நெடி.

ஏ.மஜீத் எப்போதோ ஆரம்பித்த படம் இது என்பது கிளைமாக்ஸில் கூட தெரிகிறது!

Comments

Most Recent