சரத்குமாருக்கு கேரளாவில் கெளரவம்ஜக்குபாய் விவகாரத்தில் அடிபட்டு நொந்துபோன சரத்குமாருக்கு, பழஸிராஜா மூலம் ஆறுதல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பழஸிராஜாவில் சிறப்பாக நடித்ததற்காக சரத் குமார் கெளரவிக்கப்பட்டார்.

கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பணம்பில்லி கோவிந்தமேனன் நினைவாக விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருதினை வழங்கினார்.

ரூ. 50,000 பரிசு, பாராட்டுப் பத்திரம் ஆகியவை அடங்கியது இந்த விருது. கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான சமஸ்கார சாஹிதி என்ற கலை, கலாச்சார அமைப்பு இந்த விருதினை நிறுவி அளித்து வருகிறது.

நிகழ்ச்சியில், மூத்த காங்கிரஸ் தலைவர் கருணாகரன், மத்திய அமைச்சர்கள் அந்தோணி, வயலார் ரவி, பிருத்விராஜ் சவான், சசி தரூர், கவிஞர் சுகதகுமாரி, நடிகர்கள் மோகன்லால், சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சரத்குமாரை பிரதமர் கெளரவித்தார்.

பழஸிராஜா படத்தில், இடைச்சேனகுங்கன் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். மலையாளத்தில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

Comments

Most Recent