சென்னை: ஜக்குபாய் படத்தின் திருட்டு விசிடியைத் தயாரித்து விற்றவர் போலீஸார் கடுமையாகத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்...
சென்னை: ஜக்குபாய் படத்தின் திருட்டு விசிடியைத் தயாரித்து விற்றவர் போலீஸார் கடுமையாகத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜக்குபாய் படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது படம் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு அல்ல. மாறாக படம் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பே இன்டர்நெட்டில் ரிலீஸாகி விட்டது.
அதை விட சினிமாக்காரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கில் அதை பிரிண்ட் போட்டு கூவி விற்காத குறையாக தமிழகம் முழுவதும் விற்பனைக்கு விட்டுள்ளனர்.
இதனால் ஜக்குபாய் டீம் மட்டுமல்லாமல் திரையுலகமும் அரண்டு போய் நிற்கிறது. தற்போது தமிழக முதல்வரிடம் ஜக்குபாய் படத்தின் தயாரிப்பாளரான ராதிகா சரத்குமார் முறையிட முதல்வரின் உத்தரவின் பேரில் போலீஸார் ஜக்குபாய் திருட்டு விசிடிக்களை கண்டுபிடித்து அதை விற்பவர்கள், தயாரித்தவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ஜக்குபாய் படத்தின் மாஸ்டர் பிரிண்ட் சி.டி. புதுவையை சேர்ந்த சி.டி.வியாபாரி சத்தியராஜ் என்பவரிடம் உள்ளது என்றும் அவர் மூலமாகத்தான் சி.டி.க்கள் சென்னைக்கு வந்துள்ளது என்றும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக புதுவை வடக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவதாசனுக்கு தகவல் தரப்பட்டது. புதுவை போலீசார் உருளையன்பேட்டையில் உள்ள சத்தியராஜின் வீட்டில் சோதனையிட்டனர். ஜக்குபாய் படத்தின் மாஸ்டர் பிரிண்ட் சி.டி.கிடைக்கவில்லை. சத்தியராஜ் அதை வேறு எங்கோ மறைத்து வைத்துவிட்டதாக கருதிய போலீசார் அவரை முறையாக கவனித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜக்குபாய் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. யார் மூலமாக சி.டி. புதுவைக்கு கடத்தி வரப்படுகிறது என்பதையும் அவர் சொல்ல மறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து நாளை காலை சென்னை போலீசார் வந்து உன்னை விசாரணைக்கு அழைத்து செல்ல போகிறார்கள். அதற்குள் உண்மையை சொல்லிவிடு என்று புதுவை போலீசார் சத்தியராஜை எச்சரித்தனர்.
அதன் பிறகு அதிகாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புதவை போலீஸார் மிகக் கடுமையாக விசாரித்ததாலும், சென்னை போலீஸாரிடம் சிக்கினால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் எனவும் பயந்த சத்தியராஜ், தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு காலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாருக்குப் பயந்து திருட்டு விசிடி தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.
ஏற்கனவே ஆதவன் சி.டி. தயாரித்து அனுப்பிய குற்றத்திற்காக சத்தியராஜ் அவரது மனைவி, தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். வேட்டைக்காரன் ரிலீசான சமயத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்துள்ளார்.
அப்போது வேட்டைக்காரன் படத்தின் சி.டி.க்களை பரப்பி விட கூடாது என்று போலீசார் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினராம் சத்தியராஜை.
இந்த நிலையில் சத்தியராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சத்தியராஜின் தற்கொலையால் ஜக்குபாய் படத்தின் மாஸ்டர் பிரிண்ட்டை யார் தமிழகத்திற்குள் கடத்தி வந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அதேசமயம் திரையுலகினருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
மாஸ்டர் பிரிண்ட்டை கண்டிப்பாக வெளிநாட்டில் ஜக்குபாயை ரிலீஸ் செய்ய உரிமை பெற்றவர்கள் துணையில்லாமல் கடத்திக் கொண்டு வர முடியாது என்றும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment