ஓய்வு பெறுகிறார் அமிதாப்?



பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் விரைவில் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய விருது விழா ஒன்றில் தனது எல்லைக் கோடு முடிந்துவிட்டதாக அமிதாப் கூறியதைத் தொடர்ந்து இந்த 'ஓய்வு' செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன.

பிக் பி என்று அன்புடன் அழைக்கப்படும் அமிதாப் 1969-ல் திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு கிட்டத் தட்ட 42 ஆண்டுகள் பாலிவுட்டின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்கிறார்.

இன்றும் இவருக்கு இளம் தலைமுறை ரசிகர்கள் ஏராளமாய் உருவாகி வருகின்றனர். சமீபத்தில் 13 வயது சிறுவனாக இவர் நடித்த பா திரைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இறுதி வரை நடிப்புதான் தனது வாழ்க்கை என்று கூறி வந்த அமிதாப், இப்போது ஓய்வு பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

மும்பையில் சமீபத்தில் நடந்த சினிமா பட விழாவில் அமிதாப்பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் பேசிய அமிதாப், "அபிஷேக் பச்சனுக்கு நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. நான் விரைவில் ஓய்வு பெறு சிறந்தது என எண்ணுகிறேன். எனது எல்லைக்கோடு முடிந்துவிட்டதாக உணர்கிறேன்" என்றார்.

அவரது இந்தப் பேச்சுதான், இப்போது அமிதாப் ஓய்வு குறித்த செய்திகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஓய்வுக்குப் பிறகு அமிதாப் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று சிலர் ஆரூடம் கூறினாலும், நிச்சயம் அவர் அரசியல் பக்கமே வரமாட்டார் என்கிறார்களே் அவரை நன்கறிந்தவர்கள்.

ஏற்கெனவே 1984ல் அரசியலில் இறங்கி, பெரும் மன வேதனைகளுக்கிடையே 1988ல் அரசியலுக்கு முழுக்குப் போட்டவர் அமிதாப்.

Comments

Most Recent