ராஜா இசையை இனி கண்டபடி காப்பியடிக்க முடியாது!

இன்றைக்கு புதிய படங்களின் பின்னணி இசை தொடங்கி, சென்போன் ரிங்டோன்கள் வரை பெரும் ஆதிக்கம் செலுத்துபவை இளையராஜாவின் பாடல்கள்தான்.

சுப்பிரமணியபுரம், நாடோடிகள், பசங்க போன்ற படங்களுக்கு, இளையராஜாவின் பழைய பாடல்களை அப்படியே எடுத்தாண்டனர்.

இளம் இசையமைப்பாளர்கள் பலர் இளையராஜாவின் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் ஒப்பேற்றி வந்தனர்.

இந்த நிலையில், தனது பாடல்களின் முழு உரிமையையும் அகி என்ற மலேஷிய நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளார் இளையராஜா.

இனி அவரது எந்தப் பாடலையும் ரிங் டோனாக, பின்னணி இசையாகப் பயன்படுத்த விரும்பினால் அதற்குரியஅனுமதியை அகி நிறுவனத்திடமிருந்து பெற்றாக வேண்டும்.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "நான் எனது பாடல்களின் அனைத்து பயன்பாடுகள் சார்ந்த அனுமதியை அகி மியூசிக்கிடம் ஒப்படைத்திருக்கிறேன்.

திரைப்படத் தயாரிப்பாளர்களும், பிற இசையமைப்பாளர்களும் எனது பின்னணி இசையையோ அல்லது பாடல்களையோ (முக்கியமாக 2000ம் ஆண்டுக்கு முந்திய இசையமைப்புகளை) திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு (குறிப்பாக ரீமிக்ஸ் பாடல்களை பயன்படுத்துவதற்கும்) முறையான அனுமதியையும் லைசென்ஸையும் இனி அகி மியூசிக்கிடமிருந்து பெறவேண்டும்.

விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள், சீரியல் தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்ளும் அவர்களுடைய நிகழ்ச்சிகளில் அல்லது தயாரிப்புகளில் எனது இசையை அப்படியே பயன்படுத்தினாலோ, அல்லது வேறு வடிவத்தில் மறு பதிப்பு செய்தாலோ அதற்கான அனுமதியை அகி மியூசிக்கிடமிருந்து பெறவேண்டும்.

இதன் வழி அவர்கள் எனது பாடல்களை எல்லா படிவங்களிலும் குறிப்பாக நியூ மீடியா மற்றும் டிஜிட்டல் அல்லது காலர் டயூன் அல்லது எம்பி3 என்று எல்லா வகையிலும் உலக அளவில் விநியோகிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கி இருக்கிறேன்.

சில இசை நிறுவனங்களும் மொபைல் இசை சலுகைகள் வழங்குனர்களும் இந்த உரிமங்கள் தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகக் கூறி எனது அனுமதியின்றி காலர் டியூன், ரிங்டோன், எம்பி3 மற்றும் இன்ஸ்ரூமென்டல் என்று எல்லா படிவங்களிலும் எனது இசையை விநியோகித்து வருகிறார்கள்.

2000ஆம் ஆண்டுக்கு முந்திய எனது பெரும்பாலான இசை சார்ந்த காப்புரிமை அறிவார்ந்தச் சொத்துடமை அனைத்தும் எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது..." என்றார்.

அகி நிறுவன உரிமையாளர் அகிலனும் அப்போது உடனிருந்தார்.

Comments

Most Recent