'ஏதாவது பண்ணுங்க...!' - குஷ்பு ஆவேசம்



'திருட்டு விசிடியால் சினிமா தொழிலே முடங்கிவிடும் அபாயம் உள்ளது.. அவசரமா எல்லாரும் சேர்ந்து ஏதாவது பண்ணியாகனும்... இல்லேன்னா தொழில் நடத்த முடியாது' என்றார் குஷ்பு ஆவேசமாக.

ஆறு காட்டில் போனாலும் நாட்டுக்குள் ஓடினாலும் லாவகமாக அதில் படகு ஓட்டத் தெரிந்தவர் தமிழ் சினிமாவில் அநேகமாக குஷ்பு ஒருவராகத்தான் இருக்கும்.

கலைஞர் டிவியாக இருந்தாலும், ஜெயா டிவியாக இருந்தாலும் சன் டிவியாக இருந்தாலும் குஷ்புவின் கலைப் பயணத்துக்கு மட்டும் தங்கு தடை இருக்காது. தமிழை படுகொலை செய்தாலும் அம்மணிக்கு தமிழக அரசின் விருது மட்டும் தங்கத் தாம்பாளத்தில் வந்துவிடும். அந்த அளவு இண்டஸ்ட்ரியை அளந்து வைத்திருப்பவர் அவர்.

இன்று, 'முன்தினம் பார்த்தேனே' என்ற புதிய படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்க, முற்றிலும் புதுமுகங்களே நடிக்கும் படம் இது.

பாடல் வெளியீட்டுக்குப் பின் குஷ்பு பேசுகையில், "இன்றைக்கு தமிழ் சினிமா மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசு நிறைய சலுகைகள் கொடுத்தாலும் அதை திரைப்படத்துறையினர் அனுபவிக்க முடியாத அளவு நிறைய பிரச்சினைகள் உள்ளன.

திருட்டு விசிடியை ஒழிக்க ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றாலும் தொழில் நடக்காது. பெரிய அளவு ஆக்ஷன் எடுத்தாகணும்.

இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்கு வந்து ஓரிரு படம் நடித்து கொஞ்சம் பெரிய ஆளானதும் மும்பைக்குப் போயிடறாங்க. இந்த நிலை மாறணும்.." என்றார்.

Comments

Most Recent