பிராட்பிட்-ஏஞ்சலினா ஜோடி பிரிந்து வாழ முடிவு?



லண்டன்: ஹாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான பிராட் பிட்-ஏஞ்சலினா ஜூலி பரஸ்பரம் பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஹாலிவுட்டின் பவர்ஃபுல் ஜோடிகளான இவர்கள் இருவரும் கடந்த ஐந்தாண்டுகளாக சேர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒரு ஜோடி ஐந்தாண்டுகள் சேர்ந்து வாழ்வது, ஹாலிவுட் வட்டாரத்தைப் பொறுத்தவரை வியப்புக்குரிய விஷயமாக இருந்ததால், அவ்வப்போது இந்த ஜோடி பிரியப் போவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

பிராட்பிட் கசமுசா வேலையில் இறங்கிவிட்டார் என்றும், வீட்டுக்குள்ளேயே இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசு செய்திகள் கசிந்தன.

ஆனால், தனக்கும் ஜூலிக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் பி‌ரிவதற்கான வாய்ப்பே இல்லை என 'பிட்டு' போட்டு வந்தார் பிராட்.

அதேபோல, பிட் தன்னை 'சோல்மேட்' என்று சொன்னதை குறிப்பிட்டு, எப்போதுமே பிராட், என்னோட ஆள்தான் என கூறி வந்தார் ஜூலி.

ஆனால் தற்போது இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ சட்டப்படியான ஒப்பந்தம் செய்யத் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

சுமார் 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை பிரித்து எடுத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிராஞ்சலினா ஜோடிக்கு 6 குழந்தைகள் உள்ளன. அதில் மூன்று பேர் தத்துப் பிள்ளைகள். இவர்களில் தலா மூன்று பேரை வளர்ப்பது, ஆனால் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்றும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

34 வயதான ஏஞ்சலினா ஜூலியும், 45 வயதான பிராட் பிட்டும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.


Comments

Most Recent