ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அஜீத் ஆலோசனை! திரையுலக சங்கங்கள் மிரட்டலுக்கு பணிந்து வருத்தம் தெரிவிப்பதா அல்லது துணிச்சலாக தன் வழியைத் தொடர்வ...
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அஜீத் ஆலோசனை!
திரையுலக சங்கங்கள் மிரட்டலுக்கு பணிந்து வருத்தம் தெரிவிப்பதா அல்லது துணிச்சலாக தன் வழியைத் தொடர்வதா என்று அஜீத் தனது ரசிகர்களுடன் இணைந்து ஆலோசனை செய்து வருகிறார்.நடிகர், நடிகைகளை விழாக்களுக்கு நிர்பந்த படித்தியும், மிரட்டியும் அழைப்பதாக அஜீத் பேசியது சர்ச்சையை கிளப் பியது.
ரஜினியும், அஜீத் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
பெப்சி தலைவர் வி.சி. குகநாதன், விநியோகஸ்தர் சங்கத்தலைவர் கலைப்புலி சேகரன் ஆகியோர் இருவரையும் கண்டித்தனர். ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவரது வீடு தாக்கப்பட்டது.
இந்த நிலையில் திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்தது. இதில் ரஜினி, அஜீத் கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அஜீத் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானத்தின்படி அஜீத் வருத்தம் தெரிவிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்த அசல் படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த புது படத்துக்கு தயாராகி வருகிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட சங்கம் கூட்டு கூட்டத்தின் முடிவு பற்றி அஜீத் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவாளர்கள் போன்றோருடன் ஆலோசிக்கிறார். விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பார் என்று நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அஜீத் ரசிகர்கள் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளனர்.
நாடார் சங்க ஒருங்கிணைப்பு கண்டனம்:
இந் நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் அஜீத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம் என நாடார் சமுதாய ஒருங்கிணைப்பு கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடார் சமுதாய ஒருங்கிணைப்பு தலைவர் எர்ணாவூர் நாராயணன், "கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் எப்படி தனது கருத்தை கூறினாரோ. அதேபோல் ஜாக்குவார் தங்கம் தனது கருத்தைக் கூறியிருக்கிறார். இதை அஜீத் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜாக்குவார் தங்கம் தனக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்பதற்காக, தனது ஆட்களை ஏவிவிட்டு ஜாக்குவார் தங்கம் வீடு, கார் மற்றும் அவரது மனைவி சாந்தி மீது அஜீத் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
இதேமாதிரி தனக்கு பிடிக்காதவர்கள் மீது அனைவரும் தாக்குதல் நடத்தினால் இந்த நாட்டின் நிலைமை என்னவாகும். சட்டம், நீதி கெட்டுப்போகும். ஜாக்குவார் தங்கம் வீடு, கார் மற்றும் அவரது மனைவி திருமதி சாந்தி மீது தாக்குதல் நடத்தப்பட காரணமாக இருந்த அஜீத்தை நாடார் சமுதாய ஒருங்கிணைப்பு தனது வன்மையான கண்டனதைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஜாக்குவார் தங்கத்துக்கு சமுதாயத்திலும், திரைப்பட சமூகத்திலும் எந்தவித கெட்டப் பெயரும் இதுவரை எடுத்ததில்லை. ஜாக்குவார் தங்கம் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அவருக்கு தமிழின உணர்வாளர்கள் பலர் நேரிலும், போனிலும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஜாக்குவார் தங்கதுக்கு ஆறுதல் கூறிய தமிழின உணர்வாளர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வளவு நடந்த பிறகும் அஜீத், இதுகுறித்து எந்தவித பதிலும் இதுவரை சொல்லவில்லை. இதிலிருந்து அஜீத்தின் நோக்கம் புரிகிறது. வன்முறையை எந்த வகையிலும் அனுமதிக்காத தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த சம்பவத்துக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்றார்.
Comments
Post a Comment