கணவரை காணவில்லை என்று புகார் கூறிய கனகாவும் மாயம்!



நான் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட காதல் கணவரை காணவில்லை என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கனகாவும் மாயமாகிவிட்டார்.
கரகாட்டக்காரனில் ராமராஜனுக்கு ஜோடியாக அறிமுகமாகி கலக்கியவர் கனகா. பின்னர் ரஜினிக்கு ஜோடியாக அதிசயப் பிறவியில் நடிக்கும் அளவு முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தார். பழைய நடிகை தேவிகாவின் மகள் இவர்.
புகழின் உச்சியிலிருந்த கனகாவுக்கு திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு துணையாக இருந்த தாயார் தேவிகாவும் மறைந்துவிட, கனகா காணாமல் போனார்.
கடந்த சில வருடங்களாக இவரை பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந் நிலையில், நடிகை கனகா திடீரென்று தனது கணவரைக் காணவில்லை என்று பரபரப்பு கிளப்பியுள்ளார். மேலும் தனது அம்மா தேவிகாவின் ஆவியுடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று அவர் கூறுகையில், “என் தாயார் நடிகை தேவிகா இறந்த பின், எனக்கு ஆதரவு சொல்ல யாரும் இல்லை. அம்மாவின் ஆவியுடன் பேசுவதற்கு ஆசைப்பட்டு, ஆவி அமுதாவை தொடர்பு கொண்டேன். அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் கலிபோர்னியாவில் பணிபுரியும் முத்துக்குமார் என்ற மெக்கானிக்கல் என்ஜினீயர் எனக்கு அறிமுகமானார்.
2 பேரும் சந்தித்து பேசி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி நானும், முத்துக்குமாரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள என் வீட்டில் வைத்து எங்கள் திருமணத்தை பதிவு செய்தோம்.
திருமணம் ஆகி 15 நாட்களே என் கணவர் என்னுடன் இருந்தார். அதன்பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். ஒரு சினிமா பைனான்சியர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்தான் எனது கணவரை கடத்தி வைத்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன்.
இந் நிலையில், கடந்த 3 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. போலீசில் புகார் செய்தால் உன்னை கொன்றுவிடுவோம் என்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. எனவே, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து புகார் செய்யலாம்’ என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
கனகாவும் மாயம்-தந்தை:
இந் நிலையில், இன்று காலை முதல் கனகாவையும் வீட்டில் காணவில்லை என்று அவரது தந்தை தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கனகாவின் வீட்டுக்கு நிருபர்கள் நேரில் சென்று பார்த்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. அங்கே தேவதாஸ் எழுதிய ஒரு கடிதம் கதவி்ல் செருகப்பட்டிருந்தது.
அதில், உன் கணவரைக் காணவில்லை என்று நீ கூறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இப்போது உன்னையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு திரும்பியுடன் என்னை உடனே தொடர்பு கொள் என்று கூறப்பட்டுள்ளது.
அவர் கனகாவின் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றபோது பல முறை தொடர்பைத் துண்டித்துவிட்டாராம். நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசிய அவர், “என் கணவரை நானே தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டுவிட்டேன். கணவருடன்தான் வீடு திரும்புவேன்” என்று கூறினாராம்.
அவர் எங்கே போயிருக்கிறார், அவர் கணவருக்கு என்ன சிக்கல் என்று யாருக்கும் தெரியவில்லை.

Comments

Most Recent