வடிவேலுவின் நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ் விட்ட சிங்கமுத்து!

http://thatstamil.oneindia.in/img/2010/02/10-singamuthu3-200.jpg
ரூ.25 கோடி மான நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் வடிவேலுவிடம் ரூ. 25 கோடியே 50 லட்சம் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

தன்னை ஏமாற்றி ரூ.7 கோடி பணம் பறித்த சிங்கமுத்து, தொடர்ந்து பத்திரிகைகளில் தாறுமாறாக பேட்டியும் அளித்து வருகிறார் என்று வடிவேலு கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் வடிவேலு.

இதற்கு சிங்கமுத்து தரப்பில் வக்கீல் எஸ்.அறிவழகன், வடிவேலுக்கு ஒரு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

என்னைப் பற்றி ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தீர்கள். கடந்த 3ம் தேதி, சுடுகாட்டு நிலம், ஏமாற்றிய கூட்டாளி என்ற தலைப்பில் அந்த பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. அதில், நான் நில மோசடி செய்ததாக என்மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தீர்கள். இது மிகவும் அபத்தமானது. பொய்யான உங்களது கருத்துகளால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் இருந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த இழப்பை பணத்தின் மூலம் ஈடுகட்ட முடியாது.

நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. உங்களைப் பற்றி நான் எந்தவொரு வார்த்தையையும் அவதூறாக கூறவில்லை. நான் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தியது இல்லை. ஆனால், உங்களிடம், நான் ரூ.7 கோடி ஏமாற்றியதாக கூறினீர்கள். முதலில் வாழ்க்கை என்பது ஒரு காமெடி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னால் எந்தவொரு நிலமும் வாங்கப்பட்டதில்லை.

எனவே, மேற்கண்ட தலைப்பில் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை திரும்ப பெறவேண்டியது அவசியம். இந்த நோட்டீசு கிடைத்த 2 நாட்களுக்குள் என்னிடம் நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், நோட்டீசு கிடைத்த ஒரு வாரத்துக்குள் எனக்கு நஷ்டஈடாக ரூ.25 கோடியே 50 லட்சம் தர வேண்டும். மேலும், நோட்டீசு அனுப்பிய செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

இதையெல்லாம் தராவிட்டால் அவதூறான கருத்துக்களை கூறி எனக்கு மனவேதனையை ஏற்படுத்திய குற்றத்திற்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை நான் தொடருவேன்..." என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Most Recent