தமிழ் சினிமா எனும் குடும்பத்துக்குள் அரசியல் நுழைய அனுமதித்து விடாதீர்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார். தமிழ் சினிமா துறையினருக்கு, செ...
தமிழ் சினிமா எனும் குடும்பத்துக்குள் அரசியல் நுழைய அனுமதித்து விடாதீர்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.
அமிதாப்பச்சன் தலைமை தாங்க, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய முன்னணி நடிகர்கள் உள்பட திரையுலகினர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு:
இந்த இனிய விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து – வாழ்த்தியும் – சில நல்ல அறிவுரைகளை வாழ்த்தியவர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எடுத்துக் கூறியுள்ள இந்தியாவினுடைய தலைசிறந்த கலைஞர் அமிதாபச்சனுக்கு நான் முதற்கண் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அமிதாபச்சன் அவர்களுக்கு, அவருடைய பெற்றோர் முதலில் வைத்த பெயர் ‘இன்குலாப்’ என்பதுதான். இன்குலாப் என்றால் புரட்சி – ஜிந்தாபாத் என்று பல புரட்சிகரமான முழக்கங்களை ஒலிக்கக் கேட்டிருக்கிறோம் அல்லவா – அந்த ஜிந்தாபாத் என்ற வாழ்த்துக்குரியவராக முதலில் நம்முடைய அமிதாப் அவர்கள் இளமைப் பருவத்திலே விளங்கினார்கள்.
அதற்குப் பிறகு இங்கே நம்முடைய சூப்பர் ஸ்டார், ரஜினி காந்த் அவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல், பல்வேறு துன்ப துயரங்களுக்கெல்லாம் ஆட்பட்டு, அவைகளையெல்லாம் தனி ஒருவராக நின்று சமாளித்து தன்னை நோக்கி வீசிய எதிர்ப்புப் புயலைக் கடந்து இன்றையதினம் நம்மிடையே மகிழ்ச்சிகரமாக வீற்றிருப்பது மாத்திரமல்ல, நமக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்திருப்பது நாம் பெற்ற பெரும் வாய்ப்பாகும்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அமிதாப் அவர்களுக்கும் நினைவிருக்குமென்று கருதுகிறேன். சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு – அவர் ஒரு முறை மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் – எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இல்லாவிட்டாலுங்கூட – அவர் என்னை நேரடியாகப் பார்த்ததில்லை, அவர் என்னை பார்த்ததில்லை என்ற நிலை இருந்தாலுங்கூட – இந்தியத் திருநாட்டிலே திரையுலகத்திற்கு ஒரு இழப்பு ஏற்பட்டு விடுமோ என மிகவும் வருந்தி, அவருக்கு நான் ஒரு நீண்ட தந்தி அனுப்பினேன். ‘நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும்’ என்று.
அவருக்கு வந்த ஆயிரக்கணக்கான தந்திகளில், இதை அவர் தேடிப் பார்க்க முடியாது – ஆனால் கலை உணர்வு அவருக்கு உள்ள தேசப் பற்று – அவர் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்று, அவர் ஆற்றிய கடமைகள் – அவர் அளித்த கருத்துகள் – இவைகளின்பால் எனக்குள்ள பற்று, பாசம், மதிப்பு, மரியாதை என்றைக்குமே குறைந்ததில்லை.
அதனால் தான் நன்றி தெரிவிக்கின்ற இந்த விழாவில் – இந்த விழாவை ஏற்பாடு செய்த நண்பர்கள், திரையுலகத்தினர், குறிப்பாக இயக்குநர் ராமநாராயணன், குகநாதன் போன்றவர்கள் தெரிவித்த நன்றிகளுக்கெல்லாம் சிகரமாக அமிதாப் பச்சன் அவர்களை இங்கே அழைத்து வந்து, அவர் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பது தான் – இங்கே அவர்கள் எனக்கு அளித்த பொற்கலசம், தங்க பூமி உருண்டை போன்ற பரிசுகளை யெல்லாம் விட உயர்ந்த பரிசாக நான் கருதுகிறேன்.
நான் நகராக இருப்பதா… நகர்வதா?
அமிதாப் அவர்களுடைய வருகை, பலருக்கு பல ஐயப்பாடுகளை யெல்லாம் உருவாக்கியிருக்கலாம். கருணாநிதிக்கு விழாவா? அதிலே அமிதாப் கலந்து கொள்கிறாரா? இது சிலருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கலாம் – சிலருக்கு ‘மருட்சி’யைத் தந்திருக்கலாம். மகிழ்ச்சிக்கும், மருட்சிக்கும் அதிக வேறுபாடு. எனவே நான் அது பற்றி விளக்க விரும்பவில்லை. நம்முடைய அமிதாப் அவர்கள் இங்கே உரையாற்றிய போது – தமிழ்நாட்டுத் திரைப்பட உலகம் எவ்வளவு கடமை உணர்ச்சியோடும், கட்டுப்பாட்டுத் தன்மையோடும் விளங்குகிறது என்பதைப் பாராட்டினார்கள்.
அந்தப் பாராட்டு நிலைக்க வேண்டும் – நீடிக்க வேண்டும் – தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்பதை மனதிலே வைத்துத் தான் – சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களும் – தம்பி சரத் குமார் அவர்களும் – கலைஞானி கமலஹாசன் அவர்களும் இங்கே அந்தக் கருத்தை வழி மொழிந்து பேசியிருக்கிறார்கள்.
என்னைப் புகழ்ந்த போது எனக்களித்த அழைப்பிதழிலும் சரி – அழைப்பிதழைக் கொண்டு வந்து கொடுத்த நண்பர்களும் சரி – நீங்கள் வழங்கிய அந்த இடத்திற்கு ‘கலைஞர் நகர்’ என்று பெயரிடப் போகிறோம் என்று சொன்னார்கள். கலைஞர் நகர் என்றும் பேரிடுகிறார்கள் – கலைஞரே, நகரும் என்றும் எனக்கு ஆணையிடுகிறார்கள் நான் நகர்வதா அல்லது நகராக இருப்பதா என்பது தமிழ்நாட்டு மக்களுடைய தீர்ப்பிலே இருக்கிறது.
ரூ.1800 கோடியில் வீடுகள்!
ஏறத்தாழ 90 ஏக்கரா நிலத்தை திரைப்படத் தொழிலாளர்கள், கலைஞர்கள், துணை நடிகர்கள், இயக்குநர்கள் – இவர்கள் எல்லாம் குடியிருப்பதற்கு – வீடு கட்டிக் கொள்வதற்கு வழங்க வேண்டுமென்ற வேண்டுகோள் உடனடியாக ஏற்கப்பட்டது. இதே மேடையிலே தான் இரண்டொரு மாதங்களுக்கு முன்பு அந்த உறுதியை நான் அளித்தேன்.
இப்போது அங்கே வீடுகள் கட்டப்படவிருக்கின்றன. அதற்கான அடித் தளம், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கின்றது. அது மாத்திரமல்ல, சென்னையைச் சுற்றியுள்ள, செங்கற்பட்டு மாவட்டத்தைச் சுற்றியுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த வசதியை செய்து கொடுத்தால் போதுமா? போதாது என்று நான் கருதிய காரணத்தால் தான் அண்மையிலே கவர்னர் உரையில், இந்த அரசாங்கத்தின் சார்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம்.
விரைவில் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், கிராமத்திலும், நகரத்திலும் குடிசைகளே இல்லாத நிலையை இந்த அரசு உருவாக்கப் போகிறது என்று அறிவித்திருக்கிறோம். மார்ச் 3-ந்தேதி, அதற்கான கால்கோள் விழா திருச்சி நகரத்திலே நடைபெறவிருக்கிறது.
ஆண்டு ஒன்றுக்கு 1800 கோடி ரூபாய்ச் செலவில், அரசாங்கத்தின் சார்பில் வீடுகள் கட்டி – ஏறத்தாழ 21 லட்சம் குடிசைகளை – நல்ல கட்டுமானத்தோடு கூடிய கல் வீடுகளாக கட்டித் தருகின்ற அரும்பணியை இந்த அரசு செய்யவிருக்கிறது. அதற்கு முன்னோடியாகவும், தூண்டுதலாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.
அரசியலைப் புகுத்த வேண்டாம்!
90 ஏக்கரா நிலத்திற்கு இவ்வளவு பெரிய ஏற்பாடு – இவ்வளவு பெரிய நன்றியறிவிப்பு கூட்டம் – வடக்கேயிருந்து நமது அமிதாப் பச்சன் அவர்கள் வருகை தந்து வாழ்த்துகிறார்கள் என்றால், கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு 1800 கோடி ரூபாய்ச் செலவில் 6 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 21 லட்சம் வீடுகளைக் கட்ட – நாம் திட்டமிட்டிருக்கிறோமே, அதற்கு நன்றியறிவிப்பு நடத்த தமிழகத்திலே எங்கேயாவது இடம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தேன்.
அந்த இடம் மைதானமாக இல்லை, கடற்கரையாக இல்லை, நிலமாக இல்லை, அந்த இடம் உங்களுடைய இதயமாக இருக்குமென்ற நம்பிக்கையோடு – ஏழைகளின் இதயமாக அந்த இடம் இருக்குமென்ற அந்த நம்பிக்கையோடு தான் இந்த அரசு அந்தப் பணியிலே ஈடுபட்டிருக்கின்றது.
கலையுலகம் ஒரே குடும்பம்!
இங்கே எனக்கொன்று புரியவில்லை. இங்கே தம்பி சரத்குமாரும், தம்பி ராதாரவியும், குகநாதனும் பேசும்போது ஏதோ திரைப்படத் தொழிலாளர்களுக்கிடையே மன வருத்தங்கள், ஒற்றுமையின்மை இருப்பதாகவும் அதைப் போக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்கள். நாமெல்லாம் இங்கே ஒன்று சேர்ந்திருப்பது – அரசியல் ரீதியாக அல்ல.
நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்வது – கலைக் குடும்பம் என்ற அந்த வார்த்தையின் அடிப்படையிலே தான் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதிலே அரசியலை நுழைக்க நான் விரும்பவில்லை. அரசியல் தானாக நுழைந்தால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அரசியலை நுழைத்து இதை யாரும் கெடுத்து விடாதீர்கள்.
அரசியலை நுழைத்து மேலும் நன்மைகளைச் செய்ய வேண்டுமேயல்லாமல், அரசியல் நுழைந்தால், ஆமை புகுந்த வீடாக இந்தத் திரைப்படத் துறை அமைந்து விடக் கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறையாக இருக்கிறேன்.
ஆகவே அரசியலை நுழைக்க வேண்டாம். கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தர வேண்டாம். யாரையும் வலியுறுத்தி – வருகிறாயா, இல்லையா என்று கேட்கவும் வேண்டாம். வந்தவர்களை வாழ்த்துவோம் – அவர்களை வாழ்த்தச் சொல்லிக் கேட்போம். இதைத் தான் நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஏழையை சிரிக்க வைக்கும் முயற்சி!
இந்த அரசு தொழிலாளர்களுடைய அரசு. இந்த அரசின் அடிப்படையே – அடித்தளத்து மக்கள் – ஏழையெளிய மக்கள் – வியர்வை சொட்டச் சொட்ட வேலை செய்து வாழ்கின்ற மக்கள் – அந்த மக்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம்.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று அறிஞர் அண்ணா சொன்னதை நாம் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் ஏழையைச் சிரிக்க வைக்கின்ற முயற்சியிலே ஈடு பட்டிருக்கிறோம். அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற கலைஞர்கள் – தலைவர்கள் – அரசுகள் – அனைத்துக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக நாம் எடுக்கின்ற இந்தக் காரியங்களுக்கு – இந்தச் செயல்களுக்கு – நாம் கட்டிக் காக்கின்ற ஒற்றுமை தான் வலிவானது. அந்த ஒற்றுமையை மீண்டும் மீண்டும் நீங்கள் கட்டிக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நீங்கள் தந்த சிறப்பான வரவேற்புக்கும் – நீங்கள் தந்த பரிசுகளுக்கும் – நீங்கள் அளித்த வாழ்த்துகளுக்கும் – என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனித்தனியாக நான் யாரையும் குறிப்பிட்டு இங்கே பேச முடியாது. காரணம் எல்லோரும் ஒரே உருவமாக நாம் இருக்கும்போது – எல்லோரும் நம்முடைய உறவிலே கலந்தவர்களாக இருக்கும்போது – நான் யாரையும் தனித்தனியாகப் பிரித்து அவர்களுக்கு நன்றி சொல்ல வில்லை என்று கவலைப்பட வேண்டாம்.
நான் நன்றி என்று சொல்வதே திரையுலகத்திலே உள்ள என் உடன்பிறப்புகள் அனைவருக்கும் தான் நன்றி என்று சொல்கிறேன் என்று கூறி – உடன்பிறப்புகள் வாழ்க, வெல்க என்று கூறி விடைபெறுகிறேன்…” என்றார்.
தங்க பூமி நினைவுச் சின்னம்!
முன்னதாக நடந்த பாராட்டு விழாவில், கருணாநிதிக்கு தங்க பூமி நினைவுப் பரிசு வழங்கி மகிழ்வித்தனர். மேலும் கருணாநிதியை கலையுலக விஞ்ஞானி என்றும் பட்டம் சூட்டி மகிழந்தனர்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் தலைமை தாங்கினார். ரஜினியும் கமலும முன்னிலை வகித்தனர்.
மாலை 5.30 மணிக்கே துவங்கிய கலை நிகழ்ச்சிகளை ரசித்து மகிழ்ந்தார் முதல்வர். அமிதாப்பும் கலை நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்தோடு ரசித்தார்.
விழாவில், தமிழ் சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி செய்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு தங்கத்திலான பூமி உருண்டை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
கருணாநிதி கலையுலக விஞ்ஞானி என்று திரையுலகினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
முன்னணி நடிகர், நடிகைகளின் நடனம், கமல் ஹாஸன் நடத்திய நாடகம், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வாலி எழுதி நடிகர் நடிகைகள், பாடகர்கள் பாடிய துதிப் பாடல் என கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.
நயன்தார- பிரபு தேவா இணைந்து ஆடிய நடனமும் இடம்பெற்றது.
Comments
Post a Comment