என் பெயரைச் சொல்லி சிங்கமுத்து பலகோடி மோசடி!-வடிவேலு தகவல்

http://thatstamil.oneindia.in/img/2010/02/12-vadivelu200.jpg
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் என்பெயரைச் சொல்லி ஏகப்பட்ட மோசடி களை நடிகர் சிங்கமுத்து செய்திருப்பதாக வடிவேலு பரபரப்பாக புகார் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வடிவேலுவுடனே இருந்தவர் சிங்கமுத்து. தனது படங்கள் அனைத்திலும் சிங்கமுத்துவுக்கு முக்கிய வேடங்கள் கிடைக்கச் செய்து வந்தார்.

ஆனால் கூடவே இருந்த சிங்கமுத்து நிலம் வாங்கி தந்ததில் பல கோடிகளை மோசடி செய்துவிட்டதாகவும், இதுபற்றி கேட்டபோது, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் வடிவேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள். ஆனால் சிங்கமுத்து தலைமறைவாக இருக்கிறார்.

இந்த நிலையில் சிங்கமுத்து அளித்த ஒரு பேட்டியில், "எல்லாவற்றையும் மறந்து வடிவேல் கூப்பிட்டால், நாளைக்கே நான் அவருடன் சேர்ந்து நடிக்க தயார்" என்று கூறியிருக்கிறார்.

சிங்கமுத்துவின் இந்த பேட்டி குறித்து வடிவேலு கூறுகையில், "முருகேசன் என் உயிர் நண்பன். ஆனால் அவனை நான் கொன்று விட்டதாக, சிங்கமுத்து என் மீது அபாண்டமாக பழிபோட்டு இருக்கிறார். என் தோட்டத்தில் 15 வருடங்களுக்கு முன்பு விஷம் குடித்து இறந்த துளசி என்ற பெண்ணை, என்னுடன் அநியாயமாக சம்பந்தப்படுத்தி பேசியிருக்கிறார்.

என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சிங்கமுத்துவை, மன்னிக்கவே மாட்டேன். சட்டத்தின் முன் அவரை நிறுத்தி, தண்டனை வாங்கிக் கொடுத்தே தீருவேன். காவல்துறைக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறவர், காளி கோவிலில் காசு வெட்டி போடலாம் என்கிறார். திருட்டுத்தனம் செய்யவில்லை என்றால் காவல்துறை முன்பு தைரியமாக ஆஜராக வேண்டியதுதானே...அதைவிட்டுவிட்டு, காளி கோவிலுக்கு எதற்கு கூப்பிடுகிறார்.

என்னைப்போல் சிங்கமுத்துவிடம் நிலம் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது பதற்றப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஜாதகங்களை தூக்கிக்கொண்டு ஓடுகிற மாதிரி, பத்திரங்களை செக் பண்ண ஓடுகிறார்கள். என்னைப்போல் எத்தனை பேரை சிங்கமுத்து மோசடி செய்தார், அவருடைய கூட்டாளிகள் மொத்தம் எத்தனை பேர்? என்ற உண்மைகளை மிக விரைவில் காவல்துறையினர் கண்டுபிடிப்பார்கள்.

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வடிவேலு இடம் கேட்கிறார் என்று என் பெயரைச் சொல்லி, சிங்கமுத்து பல மோசடிகளை செய்து இருக்கிறார். அதெல்லாம் மிக விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.." என்கிறார் வடிவேலு.

Comments

Most Recent