HC grants advance bail to Singamuthu

சென்னை: நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகளில் சிக்கியுள்ள நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.

நடிகர் வடிவேலு சென்னை போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து மீது போலீஸார், 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு விருகம்பாக்கம் போலீஸார் உத்தரவிட்டும் அவர் வரவில்லை.

இந்த நிலையில் சிங்கமுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வக்கீல் அறிவழகன் மூலமாக மனுதாக்கல் செய்தார்.

அதில், சென்னையில் நிலம் வாங்கி கொடுத்ததில் ரூ.7 கோடி அளவுக்கு நான் மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு என்மீது புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், என்மீது இந்திய தண்டனை சட்டம் 420, 466, 467, 469, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியிருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நான் நில புரோக்கரோ, அல்லது வர்த்தகரோ கிடையாது. எந்தவொரு காலக்கட்டத்திலும் நான் நில விற்பனையில் இறங்கியதில்லை.

பல ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருக்கிறேன். எனவே, என்மீது முன்விரோதத்தில் இதுபோன்ற தவறான புகாரை வடிவேலு கொடுத்திருக்கிறார். என்னை துன்புறுத்தும் நோக்கத்தில் பொய் புகார் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நிரபராதி. எந்த குற்றமும் செய்யாதவன். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

மேலும், இந்த நில விவகாரத்தில் வடிவேலுவையும், அவரது அலுவலக ஊழியர்களையும் நான் மிரட்டியதாக என்மீது இந்திய தண்டனை சட்டம் 506(2) என்ற பிரிவின் கீழும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தையும் நான் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கிலும் எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சிங்கமுத்து மனுக்களில் கூறியிருந்தார்.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்றம், சிங்கமுத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், 4 வாரத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், ரூ.75 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

Comments

Most Recent