Issue with Rajini and Ajith solved - VC Guhanathan

 http://thatstamil.oneindia.in/img/2010/02/26-rajini200.jpg

ரஜினி-அஜீத்துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.

திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

"எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்...", என்றார்.

Comments

Most Recent