Last Updated : ...
புதன்கிழமை மாலை ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'தமிழ் மண்ணின் சாமிகள்' என்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையம் மலைகருப்பசாமியும் அதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை அருகேயுள்ள ஏனாதி செல்லியம்மனும் வந்தார்கள். செல்லியம்மனின் வரலாறு இளைய தலைமுறைக்குத் தெரியாதாம், தெரிந்தவர்கள் கூறமாட்டார்களாம். ஆகையால் நிகழ்ச்சியிலும் தகவல் பற்றாக்குறை. செல்லியம்மனுக்கும் காளைகளுக்கும் என்ன தொடர்பு? கோயிலில் அவற்றுக்கு ஏன் முக்கியத்துவம்? எதற்காகக் காளைகளை நேர்ந்து விடுகிறார்கள்? நேர்ந்து விடப்படும் காளைகளும், கோழிகளும் பின்னர் என்ன ஆகும்? நிகழ்ச்சியில் இத்தகைய தகவல்களைக் கொடுக்க வேண்டுமே என்று யாரும் மெனக்கெட்டதாகத் தெரியவில்லை.திகிலூட்டும் பின்னணி இசையின் ஆதிக்கத்தில் கதை சொன்ன குரல் அமுங்கிப் போனது. சாமிகளை மேலும் திகிலூட்டும் வகையில் காட்டும் முயற்சியாகப் பல்வேறு கோணங்களில் படங்களைக் குலுக்கியெடுத்த கேமரா வேறு நேயர்களைப் பாடாய்ப் படுத்தியது. திகில் இசையும், மிரட்டும் குரலும், ஓரிடத்தில் நில்லாத கேமராவும்தான் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு இலக்கணம் என்று வகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளில் அட்சரம் பிசகாமல் இந்த இலக்கணத்தைப் பின்பற்றத் தமிழ்ச் சானல்கள் எதுவும் தவறுவதில்லை. எழுத்தில் உள்ள உயிர்ப்பை ஒலி ஒளி வடிவில் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பதை தமிழ் மண்ணின் சாமிகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம். குறைபாடுகள் இருந்தபோதிலும் தமிழ் மண்ணின் அறியப்படாத சாமிகளைத் தமிழ் மக்கள் அறிய உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முயற்சி என்ற வகையில் 'தமிழ் மண்ணின் சாமிகள்' நிகழ்ச்சியை - பார்க்கலாம்.இதேபோல் வெள்ளியன்று மதியம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நம்பினால் நம்புங்கள்' நிகழ்ச்சியில் நாடாண்ட ராஜா, நாகராஜாவுக்குக் கட்டிய கோயில் என்று ஒரு கோயிலைக் காட்டினார்கள். அதே திகில் இசை, மிரட்டும் குரல், அலைக்கழிக்கும் கேமரா. ஸ்கிரிப்டில் இருந்த சுவாரசியம் திரையில் இல்லை. இந்த நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து பார்ப்பார்கள் என்று 'நம்பினால் நம்புங்கள்' என்பதே ஜீ தமிழ் தொலைக்காட்சியினருக்கு நாம் கூற விரும்புவது.வெள்ளியன்று இரவு சன் தொலைக்காட்சியின் 'நிஜம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சம்மக்கா சாரலம்மாவும் இந்த வகையைச் சேர்ந்ததே. சம்மக்கா சாரலம்மா கடவுளரான கதையில் நிஜம் என்று எதனைச் சொல்ல வருகிறார்கள்? அவர்கள் கடவுளரானது நிஜமென்றால் ஸ்கிரிப்டில் பகுத்தறிவுப் போதனைகள் எதற்கு? நிஜமல்ல என்றால் நிகழ்ச்சிக்கு நிஜம் என்கிற தலைப்பு எதற்கு? மொத்தத்தில் நிஜத்தின் மூலம் அவர்கள் சொல்ல வருவதில் எது நிஜம் என்பது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே வெளிச்சம் - என்பது மட்டும் நிஜம்.வெள்ளியன்று பிற்பகல் ராஜ் தொலைக்காட்சியினர் 'இதயத்தைத் திருடாதே' மூலம் நேயர்களின் இதயங்களைத் திருடிவிட்டனர் என்றே கூறலாம். பி.சி.ஸ்ரீராமின் ரம்மியமான ஒளிப்பதிவும், நாகார்ஜுன் கிரிஜாவின் லூட்டியும், நெஞ்சிற்கினிய பாடல்களும்... அப்பப்பா... அன்றைய இளைஞர்களுக்கு அது ஒரு கனாக்காலமல்லவா... இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர்களின் இதயங்களில் மணிரத்தினத்தின் முத்திரையைப் பதித்த 'இதயத்தைத் திருடாதே' திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பளித்த ராஜ் தொலைக்காட்சிக்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.மணிரத்னத்தின் படத்தில் மயங்கிக் கிடந்தவர்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் சாண்டோ சின்னப்பா தேவரிடம் கட்டுண்டு கிடந்த கும்பலும் உண்டு. ஆம், விஜய் தொலைக்காட்சியில் தேவரின் 'தெய்வம்' திரைப்படத்தைக் காணத் தொடங்கியவர்கள் அங்கிருந்து அகன்றிருக்க முடியுமா என்ன? குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மாள் போன்ற ஜாம்பவான்களின் கணீர்குரல் பாடல்களின் ஈர்ப்பை மீறிச் செல்ல யாருக்குத்தான் மனம் வரும்?இந்த வாரம் நமக்கு வேதனையளித்த நிகழ்ச்சி என்று ஜீ தமிழ்ச் சானலில் சனிக்கிழமை காலை ஒளிபரப்பான டி ஃபார் டான்ஸ் நிகழ்ச்சியைத்தான் குறிப்பிட வேண்டும். "மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு ஒரு மழலை மாறாத குழந்தை ஆடிய ஆட்டத்தைக் கண்டு மனம் பதறிப்போனது. குழந்தை நடனமாட அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தவரும், நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்த மாஸ்டரும் மனசாட்சியை எங்கோ அடகு வைத்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றியது. அதைவிடக் கொடுமை, குழந்தையின் வயதுக்கு மீறிய நச்சு நடன அசைவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கைதட்டி உற்சாகமளித்த அவையோரின் நடவடிக்கை. ஒருவருக்காவது இது தவறு என்பதோ, பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் வேலைக்கு உடன்போகிறோம் என்பதோ தோன்றாமல் போனது வேதனையிலும் வேதனை.பெற்றோரே, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில்... குழந்தைகளுக்கு எது தேவை என்பதை விட எது தேவையில்லை என்பதை வரையறுப்பது மிகவும் முக்கியம். இனியாவது சிந்தியுங்கள்...
Comments
Post a Comment