Madurai - Wholesale retail for film piracy and CD manufacturing

http://thatstamil.oneindia.in/img/2010/02/21-vcd200.jpg 

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக எடுக்கப்படும் முன்னனி நட்சத்திரங்கள் நடித்த புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே வெளி மார்க்கெட்டில் திருட்டு விசிடிக்களாக உலா வருவது அதிகரித்து வருகிறது.

திருட்டு விசிடி பிரச்சினையை சமாளிக்க முடியாமல் திரையுலகம் திணறிக் கொண்டுள்ளது. சமீபத்தில் திரைக்கே வராத நிலையில் ஜக்குபாய் படத்தை இன்டர்நெட்டில் வெளியிடவே அதிர்ந்து போனது திரையுலகம்.

இதையடுத்து ரஜினி - கமல் துணையோடு முதல்வரைப் பார்த்து திருட்டு விசிடி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரித்தது.

இதையடுத்து திரையுலகம், முதல்வருக்கு புகழாரம் சூட்டி விழா எடுத்தது. தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிரடி சோதனைகளை வீடியோ தடுப்பு பிரிவு முடுக்கி விட்டு திருட்டு விசிடி வேட்டையை நடத்தி வருகிறது.

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பெருமானமுள்ள புதுப்பட விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தயாரிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டனர். தயாரிப்பு இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

ஆனாலும் திருட்டு விசிடிக்காரர்கள் ஓய்ந்தபாடில்லை. மறுபடியும் புது வீச்சில் கிளம்பி விட்டனர். நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜக்குபாய், கோவா, தீராத விளையாட்டு பிள்ளை, அசல் உள்பட புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள், டிவிடிக்கள் ரூ.40க்கு விற்பனையாகிறது.

ஒரே டிவிடியில் 2 புதுப் படங்களை சேர்த்து பிரின்ட் போட்டு சூடாக விற்கிறார்கள்.

மதுரையில்தான் திருட்டு விசிடி தயாரிப்பு..

இதுகுறித்து விசாரித்தபோது மதுரை மாநகரில் இருந்துதான் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு புதுப்பட விசிடிக்கள், டிவிடிக்கள் சப்ளை ஆகிறதாம்.

சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களின் திருட்டு விசிடிக்களையும் மதுரையைச் சேர்ந்த சில முக்கியப் புள்ளிகள்தான் சூடாக தயாரித்து டிஸ்டிரிபியூட் செய்து கொண்டுள்ளனராம்.

அதேசமயம், தமிழ்ப் படம் என்ற புதிய படத்தின் திருட்டு விசிடியை மட்டும் எங்குமே பார்க்க முடிவதில்லை. ஆனால் அதைத் தவிர எல்லா படமும் மார்க்கெட்டில் ரூ.20 முதல் 40 வரை கிடைக்கின்றன.

என்னதான் திரைப்பட உலகம் கூச்சலிட்டாலும், அரசு தடுத்தாலும் திருட்டு விசிடி, டிவிடியை ஓழிப்பது லேசான விஷயமில்லை என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

திருட்டு சிடி, டிவிடிகளை வாங்கி பார்ப்பது சினிமா தொழிலாளர்களை வேதனைப்படுத்துவதற்கு சமம் என்று நடிகர்கள் பேசினாலும், திரையரங்குகளில் முக்கிய கதாநாயகர்கள் நடித்த படம் என்றால் டிக்கெட் விலை ஜெட் வேகத்தில் தாறுமறாக உயர்ந்து விடுகிறது.

மேலும் பொதுமக்கள் படும் கஷ்டம் யாரும் அறிய வாய்ப்பில்லை. நடிகரின் ரசிகனுக்கும் டிக்கெட் விலை குதிரை கொம்புதான். திரையங்குகளில் எப்போது கட்டணங்களை சீராக்குகிறார்களோ அன்று தான் திருட்டு விசிடி, டிவிடிக்கள் தானாக ஓழிய தொடங்கிவிடும் என்கின்றனர் திரைப்பட நல விரும்பிகள். காத்திருப்போம்.

Comments

Most Recent