Prabhudeva - Nayanthara love sign

பிரபுதேவா - நயன்தாரா எதிர்காலத் தமிழகத்தின் காதல் அடையாளம் ?
எல்லை மீறும் விலைவாசி, எல்லைமீறும் கலைஞர் வீட்டின் குடும்ப அரசியல், ஜெயலலிதாவின் அறிக்கை அரசியல், கலாநிதிமாறனின் ஊடக ஏகபோகம் என்று தமிழ்நாட்டின்  அன்றாட வாழ்கையில் எல்லை  மீறிப்போகும் எத்தனையோ விஷயங்கள்  இருந்தாலும்,  இவை எல்லாவற்றையும் விட பாமரர் முதல் படித்தவர்வரை அனைவரது வாயிலும் அவலாக  மெல்லக்கூடிய நடப்பு விஷயமாக  தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது  பிரபுதேவா-நயன்தாரா   காதல் விவகாரம்தான்.
முன்னனி நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைகாட்சிகள், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றும்  தனியார் பன்பலை வானொலிகள்  என ஒட்டுமொத்த தமிழக மீடியாவும் இவர்களது விவகாரத்தையே மசாலாவாக பயன்படுத்தி வருகின்றன. இந்தக்காதல் ஜோடியும் தொடர்ந்து தமிழ் ஊடகங்களுக்கு தொடந்து தீனி போட்டு வருகிறது.

இவர்களது   காதலை முதலில் தீவிரமாக எதிர்த்த பெண்ணிய அமைப்புக்கள்  கூட ஒரு கட்டத்தில் தூங்கிவிட, தமிழ் சினிமா உலகின் தலைமை  பீடத்தில் இருக்கும் கே.எஸ்.ரவிகுமார், கமல், ரஜினி போன்றவர்களிடம் இருந்து இந்த ஜோடிக்கு ஆதரவு  கிடைக்க,  ஒளிந்து ஒளிந்து  காதலைக் கொண்டாடிய  இந்த ஜோடி,  இப்போது எல்லை  மீறிப் போய் விட்டதையே கடந்த  ஒருவார காலத்தில் நடந்த  சம்பவங்கள்  மெய்ப்பிக்கின்றன.

விவகாரம்  பெரிதாக வெடித்தது கடந்த  பிப்ரவரி 6-ஆம் தேதிதான். தமிழக முதல்வருக்கு நடந்த  பாராட்டு விழாவில், ஜோடி போட்டு ஆட்டம் போட்ட பிரபு நயந்தாரவின்   காதல் ரசாயனம் கண்டு  அனைவரும் அதிசயித்தாலும்,  மறுநாள் பத்திரிகைகளில் இந்த செய்தி கண்டு கொதித்துப் போனது தமிழக பொதுஜனம். அதன் பிறகு முன்பைவிட அதிக தைரியத்தோடு பொது இடங்களில் ஒன்றாக காட்சி தர ஆரம்பித்ததில் இந்த ஜோடி கொஞ்சமும் அச்சமில்லாமல் நடந்து கொள்ள,  நிலவரம் இப்போது கலவரமாகிக் கிடக்கிறது.
முதல்வர் விழாவுக்குப்பிறகு, நேற்று முன்தினம் (பிப்-13) நயந்தாரா நடிக்கும் கன்னடப் பட்த்திற்கான ஃபோட்டோ சூட் முடித்து விட்டு பெங்களூரில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கிய இவர்களை மீடியா துரத்தியது. அதற்கும் முன்பு சென்னையின் பிரபல மல்டி ஃபிளக்ஸ் திரையரங்கான ஐநாக்ஸில் ‘மை நேம் இஸ் கான்’ படத்தை ஜோடியாகப் பார்த்தது என்று தொடர்கிறது.
இன்றோ நாளையோ இந்த ஜோடி காதலர் தினத்தை எங்கே எப்படிக் கொண்டாடியது என்பதையும், பிரபு தேவாவின் மனைவி ரமலத் தனிமையில் எப்படி கண்ணீர் வடித்தார் என்பதையும் மீடியா துள்ளியமாகவோ, யூகமாகவோ செய்தி வெளியிடக் காத்திருக்கும்.   ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டின் தலைசிறந்த விழுமியம் மீது,  மிகவும் பிரபலமான செலிபரட்டிகள் நடத்தும் இந்த தாக்குதல்   அதை மேலும் பலவீனபடுத்தும்,  என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இது தமிழகத்தின் இளைய சமூகத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பது பற்றியோ,  நாளை காவல் நிலையத்துக்கு ஜோடியாக வந்து நின்று, இதையே உதாரணம் காட்டி நியாயமும், பாதுகாப்பும் கேட்கக் கூடிய, கல்லூரி மாணவ சமூகம்பற்றியோ, அல்லது பிரிந்து போகக் கூடிய இளங்குடும்பங்கள் பற்றியோ செலிபரட்டிகள் யாருக்கும் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.... முடிந்தால் ஒரு பட்டம் பதக்கம் பாராட்டு.
இந்தச் செலிபரட்டிகளின் வழங்கும் ஆதரவு கண்டு அமுங்கிப்போன பொதுநல அமைப்புக்களின்,  பொது நோக்கு அதைவிடக் கேவலமானது.  காதலில் பெருமை கண்ட தமிழர்களின் எதிகால அடையாளம் பிரபுதேவா நயன்தாரா என்று இந்தச் செலிபரட்டிகள் சொன்னாலும் ஆச்சரியம் ஏதுமில்லை. அதை ஆதரித்துக் கொடிபிடிக்கும் இந்தப் பொது அமைப்புக்கள், என்பதிலும் ஐயமில்லை. இத்தனை பேர் மகிழ்ச்சிக்காக ஒரு சில ரம்லத்துக்கள் கண்ணீர் விட்டால் என்ன?, என்பது அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லும் காரணமாகவும் இருக்கலாம்.

Comments

Most Recent