'நாகவள்ளி ஆவி'-மைசூரில் ஹோமம் நடத்திய ரஜினிகாந்த் நாகவள்ளி ஆவியால் பாதிப்பு வந்து விடாமல் இருப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
'நாகவள்ளி ஆவி'-மைசூரில் ஹோமம் நடத்திய ரஜினிகாந்த்
நாகவள்ளி ஆவியால் பாதிப்பு வந்து விடாமல் இருப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைசூர் அருகே உள்ள டி. நரசிபூர் கோவில் மிருத்யுஞ்சய் ஹோமம் நடத்தியுள்ளார்.ரஜினிகாந்ததின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் விஷ்ணுவர்த்தன். சமீபத்தில் இவர் மரணமடைந்தார். இந்த மரணம் ரஜினியை வெகுவாகப் பாதித்து விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் மைசூர் அருகே உள்ள டி.நரசிபூர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற ரஜினிகாந்த் அங்கு ஆவி தோஷம் நீக்கம் மிருத்யுஞ்சய் ஹோமத்தை நடத்தினாராம்.
மேலும் மைசூர் அருகில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் அவர் போய் பூஜைகள் நடத்தியுள்ளாராம்.
இதுகுறித்து மைசூரில் உள்ள லலிதா மஹால் பாலஸ் ஹோட்டல் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனவரி 31ம் தேதி ரஜினி தனது குடும்பத்தினருடன் இங்கு வந்து தங்கினார். 2 நாட்கள் இங்கு தங்கியிருந்தார். பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூஜைகளும் நடத்தினார் என்றார்.
இந்தப் பூஜை குறித்து ரஜினிகாந்த்துக்கு மிக நெருக்கமான, கன்னடத் திரையுலகைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஒருவர் கூறுகையில், நண்பர்களின் ஆலோசனைப்படிதான் ரஜினி இங்கு வந்தார். டி.நரசிபுராவில் பூஜைகளையும் செய்து விட்டுச் சென்றார் என்றார்.
நாகவள்ளி என்பது கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த ஆப்தமித்ரா படத்தில் வந்த ஆவி கேரக்டராகும். இந்தப் படம் தமிழில் சந்திரமுகியாக எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது 2வது பாகத்தையும் இயக்குநர் பி.வாசு எடுத்து முடித்துள்ளார். இதிலும் விஷ்ணுவர்த்தன் நடித்திருந்தார்.
ஆப்தமித்ரா முதல் பாகம் 2004ம் ஆண்டு வெளியானது. அப்படம் வெளியாகவிருப்பதற்கு சரியாக 1 மாதத்திற்கு முன்பு அப்படத்தின் நாயகி செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் 2ம் பாகம் வெளியாகவுள்ள நிலையில் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.
இருவரின் மரணத்திற்கும் நாகவள்ளியின் ஆவிதான் காரணம் என்று கன்னடத் திரையுலகில் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.
இதையடுத்தே சிறப்புப் பூஜை செய்து விடுமாறு ரஜினியை அவருக்கு வேண்டியவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். அவர்களின் விருப்பப்படியே மிருத்யுஞ்சய் ஹோமத்தை ரஜினி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment