நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன்...
நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும்.
இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர்.
ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்.
இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யூ. காரை இந்திரன் பரிசாக வழங்கினார்.
சமீபத்தில் இருவருக்கும் சென்னை அடையாறு பார்க் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்திரன் பற்றி புது வதந்தி பரவி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு தலைவர்களுடன் இந்திரனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள்.
இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லை என்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர் இந்தியா வருவதற்கு விசா அளிப்பதன் மூலம் இதை அறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த 'பத்மநாபன்' அல்ல!:
இதுபற்றி ரம்பாவின் அண்ணன் வாசு கூறுகையில், "இந்திரன் பற்றி நல்லா விசாரிச்சுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். நாங்கள் இந்த திருமணத்தில் திருப்தியாக இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை. இந்திரன் வேறு மாதிரியான ஆள் கிடையாது. அவர் பாஸ்போர்ட்டை கூட நான் வாங்கி பார்த்து இருக்கிறேன். தப்பாக எதுவுமே இல்லை.
என் தங்கை ரம்பாவை பெண் கேட்டு இந்திரன் அம்மா வந்தார். நாங்கள் அவர் குடும்பம் பற்றி விசாரித்த பிறகே ஒப்புக் கொண்டோம்.
இந்திரனின் தந்தை பெயர் பத்மநாபன். இவரை விடுதலைப் புலிகள் தலைவர் பத்மநாபன் என்று தவறாக புரிந்து இப்படி பேசுகிறார்கள் போலிருக்கிறது" என்றார்.
இதுபற்றி ரம்பா கூறுகையில், "என் மீது பொறாமை கொண்ட சிலர்தான் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். எங்கள் காதல் உண்மையானது. அதைவிட உண்மையானவர் எனக்கு கணவராக வரப்போகும் இந்திரன்" என்றார்.
Comments
Post a Comment