Why China refused visa to Jeeva?

http://thatstamil.oneindia.in/img/2010/02/16-jeeva-poonam-bajwa200.jpg
நடிகர் ஜீவாவுக்கு சீனா விசா அளிக்க மறுத்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இயற் பெயர் முஸ்லீம் பெயர் போல இருப்பதால், மதத்தைக் காரணமாக வைத்து, சீனா விசா வழங்க மறுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கும் கோ படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜீவா. படப்பிடிப்புக்காக சீனா செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாயகன் ஜீவாவுக்கு மட்டும் விசா கொடுக்க சீன தூதரகம் மறுத்து விட்டது.

படத்தின் ஷூட்டிங்கை சீன - மங்கோலிய எல்லைப் பகுதியில் வைத்திருந்தார் கே.வி.ஆனந்த். ஆனால் நாயகன் ஜீவாவுக்கு மட்டும் விசா கொடுக்க மறுத்ததால், சிக்கலானது. இத்தனைக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சிம்பு. இவருக்கு சீன அரசு விசா வழங்கியிருந்தது. கடைசி நேரத்தில் சிம்பு மறுத்ததால்தான் ஜீவாவைப் புக் செய்து படப்பிடிப்புக்கு ஆயத்தமானார்கள். ஆனால் சீன தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது.

சிம்புவுக்கு விசா வழங்கிய சீன தூதரகம், ஜீவாவுக்கு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ஜீவாவின் பெயர் முஸ்லீம் பெயர் போல இருந்ததால் தான் அவருக்கு விசா மறுக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. அவரது இயற்பெயர் அமர்.

இவர்கள் ஷூட்டிங் நடத்தவுள்ள சீன-மங்கோலியப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம்கள் கம்யூனிஸ அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை மனிதாபிம்னற்ற முறையில் அடக்கி வருகிறது சீனா.

இந் நிலையில் அந்தப் பகுதியில் நடக்கும் ஷூட்டிங்கில் வெளிநாட்டு முஸ்லீம் பங்கேற்க வேண்டாம் என்று நினைத்தே அமர் என்ற ஜீவாவுக்கு விசா தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதே போல கமல் ஹாசனையும் கூட முன்பு கனடாவில் நெடு நேரம் உட்கார வைத்து விசாரித்து அனுப்பினர் அதிகாரிகள். காரணம், அவரது பெயரில் ஹாசன் என்று இருப்பதை ஹசன் என்ற முஸ்லீம் பெயர் என்று நினைத்தும் அந்த நேரத்தில் அவர் தாடி வைத்திருந்ததாலும்.

இதுவே இந்தி நடிகர் யாராவது ஒருவருக்கு நடந்திருந்தால் இந்நேரம் நாடே பரபரப்பாகியிருக்கும், வட இந்திய மீடியாக்கள் வெளுத்து வாங்கியிருக்கும். ஆனால் கமலோ ஜீவாவோ தமிழ்நாட்டுக்காரர்களாச்சே, அதனால்தான் இன்னும் சென்னையை விட்டு இந்த விவகாரங்கள் எல்லாம் தாண்டவே இல்லை!.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளிநாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள், படும் அவமானங்கள் தொடர் கதையாகிக் கொண்டுள்ளன.

Comments

Most Recent