James Cameron to release Titanic in 3D

 http://thatstamil.oneindia.in/img/2010/03/16-titanic200.jpg

வசூல் மற்றும் விருதுகளைக் குவித்ததில் புதிய சாதனைப் படைத்த டைட்டானிக் திரைப்படத்தை விரைவில் 3 டி வடிவில் தருகிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

11 ஆஸ்கர் விருதுகள் மற்றும் 1.8 பில்லியன் வசூல் என உலக அளவில் பல சாதனைகள் படைத்த படம் டைட்டானிக். ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கினார்.

1997ம் ஆண்டு டிகேப்ரியோ- கேத் வின்ஸ்லெட் நடித்து வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் பெரும் வசூல் சாதனைப் படைத்தது.

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கடலில் மூழ்கிய அந்தக் கப்பலை, கடலுக்குள் நேரில் போய் ஆய்வு செய்து இந்தப் படத்தை எடுத்திருந்தார் கேமரூன்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி இந்தக் கப்பல் 2,223 பயணிகளுடன் மூழ்கியது. அதில் 1,517 பேர் உயிரிழந்தனர்.

இந்த வரலாற்று சோகத்தை, ஒரு அற்புதமான காதல் கதையுடன் தந்திருந்தார் கேமரூன்.

வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100வது நினைவு தினம். இந்த சோகத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை 3டி படமாக மாற்றித் தருகிறார் ஜேம்ஸ் கேமரூன். உலகம் முழுக்க இதே தினத்தில் டைட்டானிக் 3டி வெளியாகிறது.

இதுகுறித்து கேமரூன் கூறுகையில், '' முப்பரிமாணத்தில் டைட்டானிக் படத்தை மாற்றும் பணிகளை விரைவில் துவங்கவிருக்கிறேன். அதனுடன் ஒரிஜினல் டைட்டானிக் கப்பல் கடலுக்குள் சிதைந்த நிலையில் இருக்கும் காட்சிகளும் இடம்பெறும். ஆனால் அவதார் அளவுக்கு தத்ரூபமான 3டி எஃபெக்ட்ஸ் இந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை" என்றார்.

Comments

Most Recent