Kovai college student selected to act in Thangam serial

http://thatstamil.oneindia.in/img/2010/03/20-vidya-ramyakrishnan200.jpg
தங்கம் மெகா தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் நடிக்க கல்லூரி மாணவி வித்யா தேர்வு செய்யப்பட்டார்.

சின்தால் நிறுவனம் ரம்யா கிருஷ்ணனுடன் தங்கம் மெகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'சின்தால் சரும பாதுகாப்பு சவால்' என்ற தலைப்பில் போட்டி நடத்தியது.

இதில் மொத்தம் 2,376 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன், இயக்குனர்கள் டி.பி. கஜேந்திரன், சந்தானபாரதி, சரும பாதுகாப்பு டாக்டர் முருகுசுந்தரம் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்று, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் சரும அழகு மற்றும் நடிப்புத் திறமையை கணக்கிட்டு மொத்தம் 16 பெண்களைத் தேர்வு செய்தனர்.

இந்த 16 பெண்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னை, தி.நகர் கர்நாடகா சங்கத்தில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

இறுதிப் போட்டியிலும் இவர்களே நடுவர்களாக இருந்து ஏராளமான ரசிகர்களின் முன்னிலையில் மோனோ ஆக்டிங், இருவர் இருவராக நடிப்பது, நடனம் மற்றும் டி.வி. நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என மொத்தம் நான்கு சுற்றுகள் நடத்தி, வித்யா என்ற கோயம்புத்தூர் கல்லூரி மாணவியை 'தங்கம்' மெகா தொடரில் நடிக்கத் தேர்வு செய்தனர்.

போட்டியின் இடையிடையே ராஜ்காந்த்- தேவிப்ரியா நடனமும், எம்.கே. பாலாஜி, சாருலதா மணி, சாய்ராம் ஆகியோரின் பாடல்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள்- நடிகைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சின்தால் நடத்திய இந்தப் போட்டியில் தேர்வான கல்லூரி மாணவி வித்யாவுக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தங்கம் தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் நடிப்பது மட்டுமல்லாமல், பெரிய திரையில் வாய்ப்பளிப்பதாக நடுவராகக் கலந்துகொண்ட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் உறுதியளித்தார்.

விஷன் ப்ரோ ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

Comments

Most Recent