Ameers story for Vijay

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/amirandvijay.jpg

பாலாவின் ஆளுமையில் நடிக்கும் ஹீரோக்கள் மாபெரும் திருப்பு முனையை சந்தித்திருக்கிறார்கள். பாலாவைப்போலவே அமீரும் தான் கையாண்ட ஒவ்வோரு ஹீரோவுக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார்.

மௌனம் பேசியதே படத்தில் சூரியா, ராம் படத்தில் ஜீவா, பருத்திவீரனில் கார்த்தி என்று மூன்றே படங்கள் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் ஹீரோக்கள் பாத்திரங்களாக ஜொலித்தார்கள்.

மேலும் ஆனால் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் ஹீரோயிசத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சினிமா விழாக்களில் தொடர்ந்து விமர்சித்து வந்த அமீர், தான் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் தனது பாத்திரத்தையும் ஹீரோயிசத்துடன் காட்டப்போய் ‘ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?’ என்ற கடும் விமர்சனத்தை சந்தித்தார்.

ஓரளவு நல்ல சினிமா தரவேண்டும் என்று முயற்சிக்கும் அமீரை யோகியின் படுதோல்வி புரட்டிபோட்டு விட்டது. இப்பொது ஜெயம்ரவியை வைத்து கண்ணபிரான் எடுப்பதற்க்கு பதிலாக ‘ஆதிபகவன்’ என்ற அப்பட்ட பொழுதுபோக்கு படத்தை எடுக்கப் போவதாக அறைகூவல் விடுத்து களத்தில் குதித்திருக்கும் இவர், இப்போதெல்லாம் விஜய், அஜித், ரஜினி இவர்களை விழாக்களில் வாறுவதில்லை.

மாறாக அமீர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திரைவிழாவில் பேசிய பேச்சுதான் அமீர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அவரது நலம்விரும்பிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அப்படி என்ன பேசினார்?! "மவுனம் பேசியதே படத்துக்கு பிறகு நான் கதை சொன்னது விஜய்க்குதான். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை பண்ண முடியல. இப்பவும் விஜய்ய வச்சு ஒரு படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன்.

விஜய்யோட இன்றைய இமேஜ், அவருகிட்ட இருக்கிற திறமை இதை மனசுல வச்ச ஒரு படம் பண்ணுவேன். அதுக்கான காலம் சீக்கிரமே வரும்“. இதுதான் அமீர் வெட்கமில்லாமல் பேசிய விஷயம்.

இதைப் பேசுவதற்க்கு அமீர் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கலாம். தமிழ்சினிமாவை தரம் உயர்த்த வந்த ரட்சகர்களில் ஒருவன் என்று காட்டிக்கொண்ட அமீர், இப்போது சினிமா வழியே ஆடம்பரக் காரும், மாளிகையும், வங்கிக் கையிருப்பும் இருந்து விட்டால் போதும் என்ற சாராசரியாக சுருங்கிவிட்டதுதான் நம் கவலை.

இல்லாவிட்டால் யாரை விமர்சித்து வந்தாரோ அதே விஜயை இயக்கும் ஆசையை பகீரங்கமாக அறிவித்து தனது நிஜமுகத்தை அமீர் வெளிக்காட்டி இருப்பாரா?! பாவம் அமீர்! அவருக்காக பிராத்திப்போம்.

Comments

Most Recent