வடிவேலுவுக்கு கொசு கடித்தாலும் நான்தான் காரணமா – சிங்கமுத்து

http://thatstamil.oneindia.in/img/2010/04/11-singamu200.jpg
என்னால் வடிவேலுவுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அவரால்தான் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொசு கடித்தால் கூட அதற்கு நான் தான் காரணமா என்று கேட்டுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து விவகாரத்தால் கோலிவுட் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஒன்னுமண்ணாக திரிந்த இருவரும் இப்படி முட்டி மோதிக் கொண்டருப்பதற்கு அடிப்படைக் காரணம் பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

தற்போது இவர்களுக்குக்கிடையே வெடித்துள்ள புதிய மோதலால் திரையுலகம் கலகலத்துப் போய்க் கிடக்கிறது.

இந்த நிலையில் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சிங்கமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

தயாரிப்பாளர் கண்ணன் என்னிடம் வந்து தான் தயாரிக்கும் படத்திற்கு காமெடி டிராக் எழுதி தருமாறு கேட்டார். நானும் எழுதி கொடுத்தேன். பின்னர் என்னையே நடிக்க சொன்னார். நானும் ஒப்பு கொண்டேன்.

இதனிடையே கடந்த 7ந் தேதி அவரது குழந்தை பிறந்தநாள் விழாவுக்கு என்னை அழைத்தார். விருகம்பாக்கம் வேதவல்லி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நான் எனது மனைவியோடு சென்றிருந்தேன். 10 நிமிடம்தான் அங்கு இருந்தேன். அதன் பிறகு அங்கிருந்து வந்து விட்டேன்.

அப்போது நடிகர் ஆனந்தராஜ் அங்கே வந்தார். அவர் வந்த போது பட்டாசு வெடித்து கொண்டாடினர். நான் வரும் போதும் பட்டாசு வெடிக்க முற்பட்டனர். ஆனால் நான் பட்டாசு வெடித்தால் வெடிகுண்டு வெடித்ததாக சிலர் கூறுவார்கள் என்று தெரிவித்து பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டேன்.

வடிவேலு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் மிரட்டியது குறித்தும், கண்ணன் வீட்டார் தாக்கப்பட்டது குறித்தும் நாளிதழ்களை பார்த்தே தெரிந்து கொண்டேன்.

இதனிடையே வடிவேலுவுக்கு நான் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியுள்ளார். வடிவேலுவுக்கு கொசு கடித்தாலும், அவர் வீட்டில் தண்ணீர் வராவிட்டாலும் சிங்கமுத்துதான் காரணம் என்று நினைக்கிறார்.

மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன்

வடிவேலுவுக்கு வருஷாவருஷம் கொலை மிரட்டல் விடுப்பதுதான் எனது வேலையா? உண்மையை கூறுவதாயின் என்னுடைய உயிருக்குத்தான் ஆபத்து இருக்கிறது. என்னை எப்போதும் 4 மர்ம ஆசாமிகள் பின் தொடர்கின்றனர். என் வீட்டுக்கு அருகிலும் அவர்கள் நடமாடுகின்றனர். இந்த 4 பேர் பற்றி நான் எனது வழக்கறிஞருக்கும், மேலிடத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

இவர்கள் பற்றி எனது டைரியிலும் எழுதி வைத்துள்ளேன். என் உயிருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இந்த டைரியும், கடிதமும் பதில் சொல்லும். வடிவேலு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க நாங்கள் எப்படி போய் மிரட்ட முடியும். போலீசார் அதனை பார்த்து கொண்டா இருப்பார்கள். எனவே வடிவேலு சொல்வது உண்மை இல்லை.

சிங்கமுத்துவுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி தருவேன் என்று வடிவேலு கூறியிருக்கிறார். தண்டனை என்ன பர்மா பஜாரில் கிடைக்கும் பொருளா? நான் நிரபராதி. இதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றார் சிங்கமுத்து.

Comments

Most Recent