சின்னத்திரையும், சினிமா நட்சத்திரங்களுக்கான கட்டுப்பாடும்!!

http://www.dishtracking.com/blog/wp-content/uploads/2009/07/manadamayila.jpg
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சினிமா நட்சத்திரங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க கேரள திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்துள்ளது. 'டிவி'யா, திரைப்படமா என்பதை நடிக, நடிகையர் சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளலாம்' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள 'டிவி' சேனல்களில் திரைப்பட துறையை சேர்ந்த நடிக, நடிகையர், பின்னணி பாடகர்கள், இசை கலைஞர்கள் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். திரைப்படத் துறையினர் 'டிவி' சேனல்களில் பங்கேற்பதால் திரையரங்குகளில் அதிகளவில் வசூல் குறைந்து வருகிறது. இதனால் திரைப்படத் துறை பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிலிம் சேம்பர் கூட்டம் கொச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு கே.சி.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு பின் நிர்வாகிகள் கூறியதாவது: திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் டி.வி., நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் தியேட்டர்களில் அதிகளவு வசூல் குறைந்து வருகிறது. இது திரைப்படத் துறையை பாதிக்கிறது. டிவி சேனல்கள் சார்பாக, நட்சத்திர கலை விழா, விருது வழங்கும் விழா, இசை நிகழ்ச்சி என பல தரப்பட்ட நிகழ்ச்சிகளில் திரைப்படத் துறையினர் பங்கேற்கின்றனர். திரைப்படத் துறையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மே மாதம் 1ம்தேதியில் இருந்து டிவி சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர், பின்னணி பாடகர்கள், இசை கலைஞர்கள் என திரைப்படத் துறையினர் தோன்றும் திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிம் சேம்பர் முன் அனுமதியின்றி டிவி சேனல் நிகழ்ச்சிகளில் திரைப்படத் துறையினர் பங்கேற்க கூடாது. அதற்கான அனுமதி வழங்க பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும். அவ்வாறு அனுமதி பெற்று பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பக்கூடாது என்று டிவி சேனல்களிடம் கோரப்படும். 'டிவி'யா அல்லது திரைப்படமா என்பதை திரைப்பட கலைஞர்களே சுதந்திரமாக தீர்மானித்துக் கொள்ளலாம். திரைப்படத் துறை நலிந்து வரும் வேளையில் இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிலிம் சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comments

Most Recent