சென்னை: கோவா படத்துக்காக கடன் பெற்றது தொடர்பாக ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும், என்ஏபிசி நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட...
சென்னை: கோவா படத்துக்காக கடன் பெற்றது தொடர்பாக ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும், என்ஏபிசி நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், `கோவா' சினிமா படம் எடுப்பதற்காக கடன் வாங்கியது தொடர்பான வழக்கில் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
'கோவா' திரைப்படம் தயாரிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த என்ஏபிசி பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் மற்றும் வருண்மணியனிடம் ரூ.2 கோடியே 33 லட்சம் கடன் வாங்கினார்.
படம் வெளியாவதற்கு முன்னதாகவே பணத்தை திருப்பித் தருவதாக சௌந்தர்யா உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
ஆனால் உறுதிமொழிக்கு மாறாக பணம் தருவதற்கு முன்பு `கோவா' படம் வெளிட திட்டமிடப்பட்டதால் வருண்மணியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் பேரில் கோவா படம் வெளியாவதற்கு அப்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் சௌந்தர்யா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கப்பட்டது.
இதற்கிடையே, சௌந்தர்யா தரப்பில், ரூ.1 கோடியே 60 லட்சத்தை இந்தியன் வங்கி எல்டாம்ஸ் கிளை மூலமாகவும், ரூ.15 லட்சத்திற்கு காசோலை கொடுக்கவும், மீதமுள்ள ரூ.58 லட்சத்தை வரும் மே மாதம் 21ம் தேதிக்குள் கொடுப்பதாகவும் ஒப்புதல் அளித்தனர்.
இதனை என்ஏபிசி நிறுவனமும் ஏற்றுக் கொண்டது. அதேநேரத்தில் இதுதொடர்பாக எந்த வழக்கும் தொடர்வதில்லை என்றும், சௌந்தர்யா ரஜினிகாந்த் பற்றி பேட்டி கொடுப்பதில்லை என்றும் என்ஏபிசி நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இருதரப்பினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகி, இருதரப்பு சமரசத்தையும் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பெரிய கருப்பையா வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Comments
Post a Comment