Kerala distributors curtail tamil films

kerala distributors curtail tamil films
கேரளாவில் தமிழ் உள்ளிட்ட பிறமொழி சினிமாக்கள் ரீலிஸ் செய்வதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக விண்ணைத்தாண்டி வருவாயா, த்ரீ இடியட்ஸ், அவதார், மை‌ நேம் இஸ் கான் உள்ளிட்ட படங்கள் கேரளாவில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் படங்களுக்கும் அங்கு பெரும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இனி தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் நாட்டின் பிற பகுதிகளில் வெளியாகும் நேரத்தில் கேரளாவில் வெளியாகக் கூடாது என்றும், இரு வாரங்கள் கழித்தே வெளியிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை மட்டும் வெளியிடும் திரையரங்குகள் இனி கட்டாயம் மலையாளப் படங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இந்த முடிவுகள் வரும் மே 1ம் தேதி முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்றும் கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக கேரளாவில் பிறமொழிப்படங்கள் வெற்றி பெற்றுவரும் விவகாரம் ஒருபுறம் மலையாள திரையுலகினரின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. மலையாள படங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுவதாக கேளர திரையுலக பிரமுகர்கள் அறிக்கை விடாத குறையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குறையை போக்கும் விதமாக மலையாள திரையுலகம் அதிரடி முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

அதேபோல கேரள திரையுலகில், கேளரத்தை சேர்ந்த நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமும் அமலில் இருக்கிறது. நடிகர் - நடிகைகளிம் சம்பளமும் ஒரு வரையறைக்குள் இருக்கிறது. ஆனால் தமிழ் திரையுலகில் வெளி மாநிலத்தை சேர்ந்த நடிகைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும், நட்சத்திரங்களின் சம்பளம் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

Comments

Most Recent