Kushboo thanks Supreme Court | சுப்ரீம் கோர்ட்டுக்கு கடமைப்பட்டுள்ளேன் : குஷ்பு பேட்டி


 கற்பு குறித்த சர்ச்சைகள் தொடர்பாக தன் மீது போடப்பட்டிருந்த 22 வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு முன் ஆண் - பெண் உ‌டலுறவு தவறில்லை என்று நடிகை குஷ்பு அளித்த பேட்டி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அவர் மீது வழக்குகளையும் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில் குஷ்புவுக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற குஷ்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. குஷ்பு பேசியதில் தவறில்லை என்று கருத்து தெரிவித்த கோர்ட், அவருக்கு எதிரான 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில், நீதிக்காக போராடுபவர் நேர்மையானவராக இருந்தால் போதும். அரசியல், பண பலத்தை எதிர்த்து வெற்றி பெறலாம். சாதாரண குடிமக்களை காக்க சட்டம் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. கற்பு பற்றி நான் கூறியவற்றில் ஒரு பகுதியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக ஆராய்ந்து தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். கடந்த எனக்கும், எனது கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து வந்த நண்பர்கள், பொதுமக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி சுதந்திரமாக பேசுவேன். எனது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பேன், என்று கூறியுள்ளார்.

Comments

Most Recent