Entertainment
›
Cine News
›
Thoonganagaram shooting in Vaigai river | வைகையில் தூங்கா நகரம் லைவ் சூட்டிங்! பக்தர்கள் முகம்சுளிப்பு!!
Thoonganagaram shooting in Vaigai river | வைகையில் தூங்கா நகரம் லைவ் சூட்டிங்! பக்தர்கள் முகம்சுளிப்பு!!
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய காட்சியை தூங்கா நகரம் படக்குழுவினர் படமாக்கினார்கள். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அழகரை தரிசித்துக் க...
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய காட்சியை தூங்கா நகரம் படக்குழுவினர் படமாக்கினார்கள். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அழகரை தரிசித்துக் கொண்டிருந்த நேரத்தில் சினிமாக்குழுவினர் க்ளாப் அடித்து படப்பிடிப்பை நடத்தியதால் பக்தர்கள் சிலர் முகம்சுளித்தனர். மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் தூங்கா நகரம். மதுரையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் 'பசங்க' படத்தில் நடித்த விமல், 'நாடோடிகள்' படத்தில் கலக்கிய பரணி, 'ரேணிகுண்டாவில்' அமைதியாக வந்து அமர்க்களம் பண்ணிய நிஷாந்த் (குண்டு பார்ட்டி) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்துடன் புதுமுக டைரக்டர் கவுரவ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் மதுரையின் முக்கிய பகுதிகளில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் காட்சியையும் படமாக்க தூங்கா நகரம் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கிய காட்சி படமாக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கியபோது லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே படத்தின் நாயகர்கள் விமல், பரணி, நிஷாந்த் ஆகியோரும், தூங்கா நகரம் படக்குழுவினரும் ஆற்றுக்குள் தயாராக நின்றனர். டைரக்டர் ஷாட் ரெடி சொன்னதும், கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். நாயகர்கள் மூன்று பேரும் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து கோஷமிடுவது போல நடித்தனர். அதனை ஒளிப்பதிவாளர் படமாக்கினார். இதற்காக தனி மேடை அமைத்து சினிமாப்பட குழுவினர் படப்பிடிப்பை நடத்தினார்கள். மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு லைவ்வாக தூங்கா நகரத்தில் இடம்பிடிப்பது ஹைலைட் சமாச்சாரமாக இருந்தாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அழகரை தரிசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சினிமா சூட்டிங் தளம்போல கிளாப் அடித்து, ஷாட் ரெடி என்றெல்லாம் கூறி படப்பிடிப்பு நடத்தியது பக்தர்கள் சிலரை முகம்சுளிக்க வைத்ததென்னவோ உண்மைதான்!

Comments
Post a Comment