VIP Box | விஐபி பாக்ஸ்


"ச்சுப்புரமணி...' ச்சுப்புரமணி...' என "மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவி அள்ளி அள்ளி கொஞ்சிய நாய்க்குட்டி, "மூன்றாம் பிறை'யின் ஹிந்தி பதிப்பான "சத்மா'வில் வந்த சில்க்கி, "வீடு' படத்தில் நடித்த பீட்டர் ஆகியவை எல்லாமும் வளர்க்கப்பட்டது இயக்குநர் பாலு மகேந்திராவின் வீட்டில்தான்.இதைத் தவிர ஸ்னூப்பி என்ற அணில் குஞ்சு, இரண்டு வெள்ளெலிகள் அவர் வீட்டின் செல்லப் பிராணிகள். இதையெல்லாம் செல்லமாக வளர்த்து பாதுகாத்தவர் இயக்குநரின் மனைவி அகிலாம்மாள். ""ஒரு கிரியேட்டர் எப்பவும், எந்த சூழ்நிலையிலும் அவனோட கம்பீரத்தை மட்டும் தொலைத்து விடக் கூடாது'' என அடிக்கடி தன் உதவியாளர்களிடம் சொல்லுவார். இதை இயக்குநரிடம் இருந்து அடிக்கடி கேட்டவர் இயக்குநர் பாலா. இளையராஜாவை, ராஜா என்று உரிமையோடு அழைப்பார். பதிலுக்கு பாலு சார் என்பார் இளையராஜா. பாலசந்தர், வைரமுத்து என சம காலத்து படைப்பாளிகளோடு பொது மேடைகளில் இருக்கும் போது ""எல்லோரும் சென்னையில்தான் இருக்கிறோம். ஆனால் மனம் விட்டு பேசும் சந்திப்பு நடக்கவில்லை'' என அடிக்கடி வருத்தப்பட்டு பேசுவார். 
 
ள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை நீர் தேக்கத்தில் வீசி எறிந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. அணையே தூர்ந்து போனாலும் நாளை அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம். பி.சுசீலா, சித்ரா குரல்களின் தீவிர ரசிகர். பி.சுசீலா, சித்ராவின் குரலில் வந்த பாடல்களைத் தொகுத்து தனி சி.டி வைத்திருக்கிறார். ஒவ்வொரு இரவும் நிச்சயம் அந்தப் பாடல்கள் வைரமுத்துவின் வீட்டில் ஒலிக்குமாம். எந்த ஊரில் எப்படி இருந்தாலும் தினமும் காலை 7 மணிக்கு சரியாக முதல்வர் கருணாநிதியிடம் பேசி விடுவார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தொடர்கிறது இந்த தொலைபேசிக் காதல். "காதல் ஓவியம்' படத்துக்காக எழுதப்பட்ட சங்கீத ஜாதிமுல்லை... பாடலை எழுதத்தான் அதிகபட்சமாக 8 மணி நேரம் எடுத்திருக்கிறார். கவிதைகளின் காதலனாக இருந்தாலும் ஹென்றி, மாக்சிம் கார்க்கி முதல் புதுமை பித்தன், ஜெயகாந்தன் வரை பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.  5 முறை தேசிய விருது, 5 முறை மாநில அரசு விருது பெற்ற ஒரே இந்திய கவிஞர் இவர்தான். முதல் தொகுப்பான "வைகறை மேகங்கள்' இப்போது வெளிவந்திருப்பதோ 29-ம் பதிப்பு. 
 
முல்லையாற்றின் கரையில் இருக்கும் அம்மா சின்னத்தாயின் சமாதியில் அடிக்கடி ஆழ்நிலையில் அமர்ந்து விடுவார் இளையராஜா. அமைதி வழியும் அந்த இடம் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்தமானது. நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்று அடிக்கடி சொன்னாலும் ஜெயகாந்தன் மீது தனி ஈடுபாடு உண்டு.இசை வரலாற்றில் புரட்சி செய்து, சிம்பொனி கீர்த்தனைகள் எழுதி, இசையமைப்பாளர்களுக்கெல்லாம் ராஜாவாக திகழும் இளையராஜாவுக்கு சமீபத்தில்தான் மத்திய அரசு பத்ம விருது வழங்கியிருக்கிறது.இல்லம் எப்போதும் கோயில் போல் பராமரிக்கப்படும். அம்மா சின்னத்தாயின் படம் பெரிய அளவில் இருக்கும். சின்னத்தாயை வணங்கி விட்டுத்தான் இளையராஜாவின் அன்றைய நாள் தொடங்கும். ஒலிப்பதிவு நாள்களில் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் கார் உறுமிக் கொண்டே திரும்பும் போது நம் கடிகாரம் சரியாக 7 மணி காட்டும். தன் சுயசரிதை புத்தகத்தை 150 பக்கங்களுடன் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார். கார் பயணங்களின்போது பின் சீட்டில் கேமராவும், ஆர்மோனியப் பெட்டியும் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார். 
 
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தபோது அவரது இயக்கத்தில் வெளிவந்த "வீடு' படத்தை 37 முறை பார்த்திருக்கிறார் பாலா. "சந்தியா ராகம்' படத்தின் போதுதான் கிளாப் போர்டு அடிக்கும் பதவி பாலாவை வந்தடைந்திருக்கிறது. "வண்ண வண்ணப் பூக்கள்' படத்தில்தான் பாலாவுக்கு இணை இயக்குநர் பதவியை தந்திருக்கிறார் பாலு மகேந்திரா. பாலா ஆரம்பித்த முதல் படம் "அகிலன்'. ஏ.வி.எம். பிள்ளையார் கோயிலில் போடப்பட்ட பூஜையுடன் அப்படம் நின்று போனது. கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இருவரும்தான் தன் சினிமா வாழ்க்கையின் பிதாமகன்கள் என சொல்லியிருக்கிறார். இளையராஜாவை எப்போது பார்த்தாலும் காலைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார். மனதுக்கும், உடலுக்கும் ஆறுதல் தேவைப்படும் போதெல்லாம் குமரியின் விவேகானந்தர் பாறையில் இருப்பார் பாலா. ÷முதல் படமான "அகிலன்' டிராப் ஆன பொழுதில் இருந்து அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். பாலாவின் படங்கள் மீது மணிரத்னத்துக்கு தனி பிரியம் உண்டு. ஒரு முறை விக்ரமிடம் ""நான் கடவுள் பார்த்தேன். எப்படி மனம், உடல் பிறழ்ந்தவர்களை நடிக்க வைக்க முடிந்தது. அதைப் பற்றி யோசித்தால் தலை சுற்றுகிறது'' என்று சொல்லியிருக்கிறார் மணி.

Comments

Most Recent