Will Amitabh reconsider his journey to Colombo to attend IIFA? | கொழும்பு பயணத்தை ரத்து செய்வாரா அமிதாப்?

http://thatstamil.oneindia.in/img/2010/04/27-amitab-rajapakse200.jpg
மும்பை: கொழும்பில் நடைபெறவுள்ள, இந்தி சினிமாக்காரர்கள் மட்டுமே பங்கேற்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு அமிதாப் பச்சன் போவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில் ஐஐஎப்ஏ விழா குறித்து கொழும்பு சென்று அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கினார் அமிதாப் பச்சன். மேலும் ராஜபக்சே குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் இலங்கையைப் புகழ்ந்தும் பேசி விட்டு வந்தார்.

இது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் அமிதாப்பின் இலங்கை பயணத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உச்சகட்டமாக மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...

நான் இலங்கை சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு செல்லக் கூடாது என்று ஒரு தமிழர் அமைப்பின் சார்பில் எனது வீட்டை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ள விஸ்கிராப்ட் நிறுவனத்தை அழைத்து அவர்களது கோரிக்கை குறித்து தெரிவித்துள்ளேன். தமிழ்

அமைப்பின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் தருமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.

அதன் பேரில் விஸ்கிராப்ட் நிறுவனத்தினரும், தமிழ்அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேசினர் என்று நம்புகிறேன். காவல்துறையினரும் அவர்களுடன் பேசியுள்ளனர்.

மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக விரைவில் விழாக் குழுவின் ஆட்சிமன்றக் குழு கூடி விவாதித்து நல்ல முடிவை எடுக்கும் என தமிழ் அமைப்பினருக்கு விஸ்கிராப்ட் கூறியுள்ளதாக அறிகிறேன்.

அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் செயல்பட்டு சுமூக முடிவு காண்பார்கள் எனநம்புகிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப்.

இதன் மூலம் அமிதாப் பச்சன் கொழும்பு செல்வது குறித்து மறு பரிசீலனை செய்யக் கூடும் என்று தெரிகிறது.

Comments

Most Recent