HC banned Moser Baer to release old hits of MGR, Rajini | எம்ஜிஆர்-ரஜினி படங்கள்: மோசர் பேர் நிறுவனத்துக்கு தடை

http://thatstamil.oneindia.in/img/2010/05/25-mgr-latha200.jpg
சென்னை: எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் ஹாசன் நடித்த 70 சினிமா படங்களை டி.வி.டி., வி.சி.டி.களாக வெளியிடுவதற்கு மோசர் பேர் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் மாடர்ன் டிஜிடெக் மீடியா நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஜெகநாதன் தாக்கல் செய்த மனுவில், "பல சினிமா படங்களுக்கு காப்புரிமை பெற்று அவற்றை சி.டி.யாக தயாரித்து வெளியிடுகிறோம். இதனடிப்படையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிவகுமார், சத்தியராஜ், பாக்கியராஜ், பிரபு, முரளி, தியாகராஜன், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து வெளியான 70 சினிமா படங்களுக்கான காப்புரிமை எங்களிடம் உள்ளது.

பணக்கார குடும்பம், பாசம், பெரிய இடத்துப் பெண், ஆலயமணி, முதல் வசந்தம், மூன்று முடிச்சு, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காலமெல்லாம் காதல் வாழ்க, கடல் மீன்கள், கோழி கூவுது, நீதிக்குத் தலைவணங்கு, பாலும் பழமும், பட்டணத்தில் பூதம், ராசுக்குட்டி, ராஜாதிராஜா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ரெயில் பயணங்களில், முகராசி, மலையூர் மம்பட்டியான், ரங்கா உட்பட 70 சினிமா படங்களுக்கான காப்புரிமை எங்களிடம் உள்ளது.

ஆனால் டெல்லியைச் சேர்ந்த மோசர் பேர் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், நாங்கள் உரிமம் பெற்றுள்ள படங்களை டி.வி.டி., வி.சி.டி.களாக தயாரித்து வெளியிடுகின்றனர். எனவே நாங்கள் காப்புரிமை பெற்ற சினிமாக்களை வெளியிட அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்..." என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஏற்கனவே ஜெகநாதன் காப்புரிமை பெற்றுள்ள 70 தமிழ் சினிமா படங்களை வி.சி.டி, டி.வி.டி.களாக வெளியிடுவதற்கு மோசர்பியர் நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Comments

Most Recent