Interim stay for Arun Vijay's Maanja Velu | 'அருண் விஜய்யால் ரூ.1.5 கோடி நஷ்டம்'! - மாஞ்சா வேலு படத்துக்கு தடை

http://thatstamil.oneindia.in/img/2010/05/07-maanja-velu200.jpg


அருண் குமார் நடித்த ‘மாஞ்சா வேலு’ திரைப்படத்தை திரையிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த டாக்டர் காளிதாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அம்பிரிஷினி ஆர்ட் நிறுவனம் சார்பில் ‘துணிச்சல்’ என்ற படத்தை 2005ல் தயாரித்தேன். படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் சம்பளம் பேசி முன்பணம் ரூ.5 லட்சம் கொடுத்தேன். ரூ.2 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஷூட்டிங் 2007ல் முடிந்தது. படத் தயாரிப்பு பணிகள் 2008 ஜூன் மாதம் முடிந்தது. படத்துக்கான டப்பிங் செய்வதற்கு அருண் விஜய் வராததால் அந்த ஆண்டு படத்தை வெளியிட முடியவில்லை.

தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் செய்தேன். இந்நிலையில், அருண் விஜய்யின் மாமனார் ‘மாலை மலர்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதுகுறித்து கேட்டதற்கு, சொந்த படம் வெளியிட்ட பின்னர் துணிச்சல் படத்தை வெளியிடலாம் என்று அருண் விஜய் கூறினார். இதனால், வேறு ஒருவர் மூலம் டப்பிங் செய்து படத்தை வெளியிட விளம்பரமும் செய்துவிட்டேன். இதுகுறித்து, திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் அருண் விஜய் அவரது தந்தை என் மீது புகார் கொடுத்தனர். சமாதான பேச்சுக்கு பின் டப்பிங் செய்ய அருண் விஜய் முன்வந்தார். சில நாட்கள் டப்பிங் செய்துவிட்டு, மாஞ்சா வேலு படத்தில் நடிப்பதால் டப்பிங் செய்ய முடியவில்லை என்று கூறினார். மேலும், படத்துக்கு எதிராக பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்தார். துணிச்சல் படத்தை திரையிட 160 தியேட்டர்களை புக்கிங் செய்திருந்தேன். அவரால் எல்லாம் வீணாகிவிட்டது.

கடைசியில் 2010 ஜனவரி 1ம் தேதி படத்தை 16 தியேட்டர்களில் மட்டும் திரையிட்டேன். மாஞ்சா வேலு படத்துக்காக அதிக கவனம் எடுத்து நடித்து வரும் அருண் விஜய்யால் எனக்கு ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனது பெயருக்கு பங்கம் ஏற்படுத்தியதாக ரூ.25 லட்சம் நஷ்ட ஈட்டை அருண் விஜய் தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு தரும்வரை ‘மாஞ்சா வேலு’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 19ம் தேதி வரை மாஞ்சா வேலு படத்தை திரையிட இடைக்கால தடை விதித்ததுடன், அருண் விஜய் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Most Recent