Shobana adopts a child | குழந்தையை தத்தெடுத்தார் ஷோபனா!

http://thatstamil.oneindia.in/img/2010/05/22-shobana200.jpg
சென்னை: நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனா, ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார்.

எனக்குள் ஒருவன் படத்தில் கமல் ஹாஸன் ஜோடியாக அறிமுகமாகி, 'தளபதி,' 'சிவா' ஆகிய படங்களில் ரஜினிகாந்துடன் நடித்துப் புகழ்பெற்றவர் ஷோபனா.

சமீபகாலமாக அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். பரதநாட்டியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், நாட்டிய நாடகங்களை நடத்தி வருகிறார்.

ஷோபனா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் வயதுள்ள மற்ற கதாநாயகிகள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு கணவர்-குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஷோபனா மட்டும் திருமணம் செய்துகொள்ளாமல், தனது தாயார் ஆனந்தியுடன் சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருகிறார்.

இடையில் திருமணமான ஒருவருடன் ஷோபனாவை இணைத்து சர்ச்சைகளும் கிளம்பி பின்னர் அடங்கின. இந்த நிலையில், அவர் இப்போது ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது.

குழந்தைக்கு, உறவினர்கள் சோறு ஊட்டும் நிகழ்ச்சி, கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடந்தது.

தாயார் ஆனந்தி, மற்றும் தத்து எடுத்த குழந்தையுடன் கோவிலுக்கு வந்தார், ஷோபனா. அங்குள்ள பிரகாரத்தில் அமர்ந்து அவர், குழந்தைக்கு சோறு ஊட்டினார்.

அதன்பிறகு ஷோபனா, குழந்தைக்கு துலாபாரம் செலுத்தினார். குழந்தையின் எடைக்கு எடை வெண்ணையை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், ஷோபனாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.

Comments

Most Recent