Singamuthu arrest : Vadivelu thanks to police

 http://img1.dinamalar.com/cini//CNewsImages/2113singamuthu.jpg
நடிகர் வடிவேலுவின் மானேஜர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சிங்கமுத்து கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கருத்து கூறிய வடிவேலு போலீசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சினிமாவில் காமெடியர்களாக வளைய வந்து ரசிகர்களை சிரிப்பூட்டிய வடிவேலுவும், சிங்கமுத்துவும் பரம விரோதிகளாகி சண்டை போட்டு வருகிறார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களை கூறிய வண்ணம் இருக்கிறார்கள். சிங்கமுத்து மீது ஏற்கனவே வடிவேலு 2 வழக்கு போட்டுள்ளாம். அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வடிவேலுவின் மானேஜர் சங்கர், தன்னை சிங்கமுத்து மிரட்டியதாக ஒரு புகார் அளித்தார். இந்த வழக்குகளில் எல்லாம் ஜாமீன் பெற்று கைதாகாமல் இருந்து வந்த சிங்கமுத்து மீது நேற்றும் மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. வடி‌வேலுவின் மானேஜர் சங்கர் கொடுத்த அந்த புகாரில், ''அலுவலகத்தில் நான் இருந்தபோது என்னை நடிகர் சிங்கமுத்து சந்தித்தார். என்னுடன் தகராறில் ஈடுபட்டார். 'நான் வேலையில்லாமல் வீட்டில் இருக்கேன். உங்க ஆளு(வடிவேலு) சூட்டிங் போயிட்டானா. என் மீதான வழக்குகளை வாபஸ் வாங்கா விட்டால் தொலைத்து விடுவேன்' என, என்னை மிரட்டினார்,'' எனக் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை புழல் ‌ஜெயிலில் அடைத்தனர்.

முன்னதாக கைது செய்து போலீசார் அழைத்து சென்றபோது சிங்கமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை ஜெயிலுக்கு அனுப்ப அவர் (வடிவேலு) ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன். எந்த தவறும் செய்யாமல் தண்டனை பெறுபவர்கள், கடவுளின் ஆதரவை பெற்றவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் நான் இப்போது கொடுத்து வைத்துள்ளேன். வடிவேலுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார். செல்வாக்கு உள்ள ஒருவர் பொய் புகார் கொடுத்து யாரையும் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம். எத்தனை நாளைக்கு அவர் இப்படி ஆட்டம் போடுவார் என்றும் பார்ப்போம். நான் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு இப்போது எந்த குறையும் இல்லை, ஜெயிலுக்கு போய் விட்டு வருகிறேன், என்றார்.

சிங்கமுத்துவின் வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் பேசுகையில், அரசியல் செல்வாக்கு பின்னணியில் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம். இதில் மனித உரிமை மீறல் உள்ளது. ஜனநாயகத்துக்கு விரோதமாக பொய் வழக்கு போடப்பட்டு சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார், என்றார்.

சிங்கமுத்து கைது பற்றி நடிகர் வடிவேலு அளித்துள்ள பேட்டியில், சட்டம், தன் கடமையை செய்திருக்கிறது. என்னை சிங்கமுத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து அவர்களின் கடமையை இப்போது செய்திருக்கிறார்கள். போலீஸ் துறைக்கு நன்றி ‌தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

Comments

Most Recent