தமிழ் நடிகை ஸ்னேகாவுக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் கடும் மோதல் தொடங்கியிருக்கிறது. இது குடுமிபிடிச் சண்டையல்ல... சந்தைப் போர்...
தமிழ் நடிகை ஸ்னேகாவுக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் கடும் மோதல் தொடங்கியிருக்கிறது. இது குடுமிபிடிச் சண்டையல்ல... சந்தைப் போர்!
இந்தியாவில் ஹேர் ஆயில் எனப்படும் கூந்தல் எண்ணெய் - பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்- மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதன் ஆண்டு சந்தை மதிப்பு மட்டும் ரூ 750 முதல் 900 கோடி. இந்த சந்தையில் மார்க்கெட் லீடராக கடும் மோதலில் இறங்கியுள்ளன பல நிறுவனங்கள்.
இதற்காக பல புதுமையான, கவர்ச்சியான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஹேர் ஆயில் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான டாபர் ஆம்லா, தனது டாபர் ஆம்லா நெல்லி ஹேர் ஆயில் விளம்பரத் தூதராக ஸ்னேகாவை ஒப்பந்தம் செய்து, பல விளம்பரப் படங்களை எடுத்துள்ளது. பத்திரிகைகள், டிவிக்களிலெல்லாம் ஸ்னேகா, தனது இயற்கையான கருங்கூந்தலை விரித்துவிட்டபடி புன்னகைத்து மயக்கியவண்ணம் உள்ளார்.
இதற்குப் போட்டியாக, தீபிகாவை களமிக்கியுள்ளது மரிகோ நிறுவனம், தனது புகழ்பெற்ற பிராண்டான பாரசூட் தேங்காய் எண்ணெய்க்காக.
பொதுவாக தென்னிந்தியாவில்தான் ஹேர் ஆயில் உபயோகம் அதிகம் என்கிறது நுகர்வோர் சந்தை ஆய்வுகள். அந்த மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டும் என்பதாலேயே ஸ்னேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் டாபர் நிறுவனத்தினர்.
இந்த சந்தைப் போரில் எந்த நடிகையின் கொடி பறக்கப் போகிறது.. பார்க்கலாம் என ஆவலுடன் வேடிக்கைப் பார்க்கும் பிற நிறுவனங்கள், சத்தமின்றி தங்களுக்கும் ஒரு கவர்ச்சி நாயகியை விளம்பரத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Comments
Post a Comment