இளையராஜா... வாராது வந்த மாமணியாய், தமிழ் இசையை புதிய சிகரத்துக்குக் கொண்டு போன கலைஞன். 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந...
இளையராஜா... வாராது வந்த மாமணியாய், தமிழ் இசையை புதிய சிகரத்துக்குக் கொண்டு போன கலைஞன்.
35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர்.
பண்டிதர் மட்டுமே படித்து உருகிக் கொண்டிருந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு பாமர ரசிகர்களையும் உருகவைத்த பெரும் கலைஞன் இளையராஜா.
திருவாசகம் குறுந்தகடை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இளையராஜா கொடுக்கச் சென்றபோது அவரை அறிமுகப்படுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "எங்கள் மண்ணின் ஒப்பற்ற இசைக் கலைஞன், இவர் குரலுக்கு இசை ரசிகர்கள் அத்தனை பேரும் அடிமை" என்று கூறினார்.
அதற்கு பிரதமர் சொன்ன பதில், "ஆம்... அதை நானும் அறிவேன்!".
900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை.
இன்றும் பல புதிய இசைக்கு தோற்றுவாயாக இருப்பது ராஜாவின் பழைய பாடல்கள்தான். ஒரு புதிய பாடலுக்கு உள்ள வரவேற்பை விட, ராஜாவின் பழைய பாடலின் ரீமிக்ஸுக்கு எத்தனை வரவேற்புள்ளது என்பதற்கு சர்வம் தீம் இசையே சான்று.
பொதுவாக பிறந்த நாளை கொண்டாடாமல் வெளியூர் கிளம்பிவிடும் ராஜா, இந்த முறை தனது ரசிகர்களின் அன்பு வேண்டுதலுக்காக சென்னையில் பிறந்த நாள் கொண்டாடினார்.
சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று பிற்பகல் கேக் வெட்டி கொண்டாடினார். ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.
முன்னதாக தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தனர்.
இளையராஜாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஜூன் 5ம் தேதி அவரது மகள் பவதாரிணி ஏற்பாடு செய்துள்ளார். இதில் தமிழ், இந்தி பிரபல பாடகர்கள் பங்கேற்றுப் பாடுகிறார்கள். இளையராஜாவின் புகழ்பெற்ற நத்திங் பட் விண்ட் ஆல்பத்தை முழுவதுமாக இசைக்கிறார்கள் கலைஞர்கள்.
இசைஞானியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தும் கோடிக்கணக்கான நெஞ்சங்களோடு தட்ஸ்தமிழும் இணைகிறது.
Comments
Post a Comment