Raktha Charithira in trouble due to Vivek Oberoi | ஓபராயால் 'மாட்டிக் கொண்ட' சூர்யா - ப்ரியாமணி!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzPO3BKDPKoKiLxg_lesVMLSdoVGK9AnG0ewi5odkC7a-ruzgDVOhxc-rUu5W_hMR-g-Nyw4CgBrSA-qTartBXfA-08zfa0yhc6Ye29YLgtLvsP-OvQYIUC2zp0dssw0FnNK_GOasC9Hk/s1600/Priyamani-Rakta-Charitra-Movie-stills-pics-03.JPG
தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தடையை மீறி கொழும்பு போய் ஐஃபா விழாவில் கலந்து கொண்ட விவேக் ஓபராயால், நடிகர் சூர்யா - ப்ரியாமணி நடித்துள்ள ரக்த சரித்திரா படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் தயாராகி வருகின்றன. இனியொரு முறை தடை அறிவித்தால், அதை மீற முடியாத மனநிலையை நடிகர் - நடிகைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அமைப்பின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்விழாவில் கலந்து கொள்வோருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தடையை மீறி இலங்கை பட விழாவில் பங்கேற்ற ஹிரித்திக்ரோஷனின் கைட்ஸ், கரீனா கபூரின் ராஜா சீட்டி படங்கள் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டன. இப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று நாம் தமிழர் இயக்கம் அறிவித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சூர்யா, பிரியாமணி நடிக்கும் ரக்த சரித்திரா என்ற இந்தி - தெலுங்கு படம் சிக்கலில் மாட்டியுள்ளது. இதில் விவேக் ஓபராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், பிரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். ராம்கோ பால்வர்மா இயக்குகிறார். இப்படத்தை தமிழிலும் ரத்த சரித்திரம் என டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

விவேக் ஓபராய் தடையை மீறி இலங்கை பட விழாவில் கலந்து கொண்டார். அவரது படங்களுக்கு 5 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் முடிவின்படி விவேக் ஓபராய் படத்தை தியேட்டர் அதிபர்கள் திரையிடமாட்டார்கள். ரக்த சரித்திரா படமும் இந்தத் தடையில் மாட்டியுள்ளது.

இது பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, "இலங்கை பட விழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் தீர்மானம் தொடர்கிறது. விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராய்க்கும் இது பொருந்தும். நடிகர் சூர்யா - ப்ரியா மணிக்காக எந்த தளர்வும் இதில் செய்ய முடியாது," என்று கூறினார்.

Comments

Most Recent