Salman Khan, Kareena's 7 films banned in South | சல்மான்கான், கரீனாவின் 7 படங்களுக்கு 5 மாநிலங்களில் தடை!!

http://thatstamil.oneindia.in/img/2010/06/06-salman-kareena200.jpg
சென்னை: தடையை மீறி ஐஃபா விழாவில் பங்கேற்ற சல்மான்கான், கரீனா கபூர் நடித்து வெளியாகவுள்ள 7 புதிய படங்களுக்கு தென்னகத்தில் உள்ள 5 மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகர்- நடிகைகள் பங்கேற்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் தடை விதித்தன.

ஆனால் தடையை மீறி இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோர் பங்கேற்றனர்.

ரோஷன் மீது வழக்கு தொடர முடிவு

இதையடுத்து சென்னையில் சத்தியம், ஈகா, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய 4 தியேட்டர்களில் திரையிட்டு ஓடிக்கொண்டிருந்த ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படம் நேற்று முன்தினம் உடனடியாக தூக்கப்பட்டது. ஹிரித்திக்ரோஷனிடம் நஷ்டஈடு கேட்கவும், அவர் மறுத்தால் வழக்கு தொடரவும் விநியோகஸ்தர் தரப்பில் ஆலோசனை நடக்கிறது.

அடுத்தக்கட்டமாக விரைவில் ரிலீசாக உள்ள சல்மான்கான், கரீனா கபூரின் 7 படங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது.

சல்மான்கான் நடித்து வரும் பந்தா ஏக் பிந்தாஸ் என்ற படம் ஜூலை 9-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நடிக்கும் டாபங்க் என்ற படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இவ்விரு படங்களும் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்படமாட்டாது.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுவை மாநிலங்களிலும் இப்படங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநில திரைப்பட அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தென்னிந்திய பிலிம்சேம்பருக்கு உறுதி அளித்துள்ளன.

சல்மான்கானுக்கு ஏற்கனவே தொடர்ச்சியாக 5 படங்கள் தோல்வி அடைந்தன. பிரபுதேவாதான் அவருக்கு வாண்டட் என்ற படம் மூலம் மறுவாழ்வு கொடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. சென்னையிலும் வசூலை வாரி குவித்தது.

இதுபோல் கரீனாகபூர் நடித்து சமீபத்தில் ரிலீசான 3 இடியட்ஸ் படமும் சென்னையில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள மைலேஞ்ச் மைலேஞ்ச், சித்தார்த் மல்கோத்ராஸ் நெக்ஸ்ட், கோல்மால் 3, ரா ஒன், ஏன்ஜனட் விநோத் ஆகிய 5 படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சல்மான் படத்தைக் கைவிட்டார் பிரபுதேவா

மேலும் சல்மான்கானை வைத்து இயக்கவிருந்த படத்தை பிரபு தேவா கைவிட்டிருப்பதாகவும், அந்தக் கதையில் அமீர்கானை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும் சல்மான்கானை வைத்து படம் பண்ணத் திட்டமிட்டிருந்த இயக்குநர் சரண், இப்போது வேறு ஹீரோ தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.

Comments

Most Recent