Tele Chips - Over all updates behind the small sceenசிம்பு, தெலுங்கின் மகேஷ்பாபு இணையும் படத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் "பையா' சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியடைந்துள்ளதால், லிங்குசாமியின் இந்தப் படைப்பு பிரமாண்டமாக உருவெடுக்கிறதாம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்தப் படத்துக்காக தமன்னாவுக்கு சிபாரிசு செய்திருக்கிறாராம் சிம்பு.

அதிகாரத்தில் இருப்பவர்களால் பாதிப்படையும் ஒரு சாமனியனின் கதைதான் "ராவணன்'. தமிழில் 220 பிரிண்ட்டுகளும், தெலுங்கில் 125 பிரிண்ட்டுகளும், ஹிந்தியில் 500 பிரிண்ட்டுகளும் போடப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்காக தமிழில் 125, தெலுங்கில் 25, ஹிந்தியில் 305 என மொத்தம் 1,300 பிரிண்ட்டுகள் போடப்பட்டுள்ளன. அதிக பிரிண்ட்டுகள் போடப்பட்ட படங்களில் "ராவணன்' குறிப்பிட்ட இடத்தை பிடித்திருக்கிறதாம். ஆகஸ்ட்டில் தொடங்குகிறது கௌதம் மேனன் இயக்கும் அஜித்தின் 50-வது படம். பார்முலா கார் பந்தயங்களில் கலந்து கொண்டு தற்போது லண்டனில் இருக்கும் அஜித்துக்கு, படத்துக்கான கதாநாயகிகள் பட்டியல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடித்த சமந்தாவின் பெயர்தான் கௌதம் மேனனின் முன் மொழிவாம்.
ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பூ இருந்த இடத்தில் நதியா. குஷ்பூவுக்கு பதில் யாரை வைத்து நிகழ்ச்சியை தொடங்கலாம் என தயாரிப்பு நிறுவனமும், ஜெயா டி.வி. குழுவும் யோசனையில் ஆழ்ந்து இருக்க, நதியாவை சத்தமில்லாமல் டிக் அடித்தது அ.தி.மு.க. தலைமை. இந்த பின்னணியுடன் அவரை நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ""குஷ்பூவை போல் நீங்களும் அரசியலுக்கு வந்து விடுவீர்களா'' என கேட்ட செய்தியாளர்களுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்திருக்கிறார் நதியா. அழிவுவேளையின் நம்ப முடியாத தருணங்களை பதிவு செய்து மெய்சிலிர்க்க வைக்கிறது டிஸ்கவரி சேனலின் "டெஸ்ட்ராய்ட் இன் செகண்ட்ஸ்'. இந்த நிகழ்ச்சிக்காக தவிர்க்க முடியாத, நம்ப முடியாத தருணங்களை படம் பிடித்திருக்கிறார் ரான் பிட்ஸ். உளவு விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்படும் தீ விபத்து. கொரியாவின் பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்த தீ விபத்து. நிலநடுக்கத்தின் உச்சக் கட்ட காட்சிகள், இயற்கை சீற்றங்களின் பரபரப்பு நிமிடங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நெருங்குகிறதாம். இந்த முறையும் முதல்வருக்கு நெருக்கமானவரே சங்கத்துக்கு தலைவராகலாம் என்கின்றன விவரம் அறிந்த வட்டாரங்கள். அவருக்கு நெருக்கமான சினிமா புள்ளிகள் போட்டியில்லாமல் தேர்தலை முடித்து அவருக்கு வெற்றிக் கனியை ஈட்டித் தரும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்காக தி.மு.க.வில் அண்மையில் இணைந்த குஷ்பூவின் விருப்பமும் கேட்கப்பட்டதாம். நடிகை "நோ' சொல்ல தயாரிப்பு வட்டாரத்துக்கு இராம.நாராயணன் தான் தலைவர் என்பது முடிவாகி விட்டது. நலிந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவ மீண்டும் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தப் போகிறது ஆல் இண்டியா பெப்ஸி. இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த விழா சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கிறது. அதே போல் வரும் செப்டம்பரில் அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டையும் நடத்தப் போகிறார்களாம். விழாவில் முதல்வருக்கு விருது வழங்கப்பட உள்ளதாம்.

தேர்தலுக்குள் கேப்டன் டி.வி.யை கிராமத்துக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வேலையை முதன்மையாக வைத்துள்ளது தலைமை. இதற்காக சுமங்கலி கேபிள் விஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே, நிகழ்ச்சிகளுக்கு புதுப் பொலிவு கூட்டி முன்னணி சேனல்களுக்கு போட்டியாக கொண்டுவரும் ஆபேரஷனுக்கு தலைமை தாங்குகிறாராம் பிரேமலதா.

Comments

Most Recent