Why should taken semmozhi conference, c.m., karunanithi define | செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்? முதல்வர் கருணாநிதி விளக்கம்

http://img.dinamalar.com/data/large/large_23868.jpg
சென்னை:"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்' என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தூர்தர்ஷன் "டிவி' மற்றும் ரேடியோவில், முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:இதுவரை, எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது கோவையில் நடக்கும் மாநாடு, அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடக்கும் மாநாடு. தமிழ், "செம்மொழி' என அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு.

உலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், "கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்' ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.

தமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.

"மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது.தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.

பல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.இவ்வாறு முதல்வர் உரை நிகழ்த்தினார்.

Comments

Most Recent